Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாளை ரகசிய வாக்கெடுப்பு இல்லையெனில்.. - ஓ.பி.எஸ் திட்டம் என்ன?


Murugan| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (16:45 IST)
தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் யார் அமரப்போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்..

 

 
கடந்த 7ம் தேதி, சசிகலா தரப்பிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் நேற்று அழைத்ததன் மூலம் அனைத்து பரபரப்புகளும் நேற்று முடிவிற்கு வந்தது..
 
எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறியிருந்தார். ஆனால், நாளையே சட்டமன்றத்தை கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளும் அதிமுக அரசு முடிவெடுத்துள்ளது. இதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவுதான் முக்கியம். அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டில்தான், தமிழகத்தின் முதல்வர் இருக்கையில் யார் அமரப் போகிறார்கள் என்பது தெரிய வரும். 
 
ஆனால், அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க விடாமல், கூவத்தூரில் விடுதியில் தங்க வைத்து பேரம் பேசிக் கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு. அவர்களை வெளியே கொண்டு வர ஓ.பி.எஸ் எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. 10 எம்.எல்.ஏக்களை மட்டுமே ஓ.பி.எஸ் பக்கம் வந்துள்ளனர். எனவேதான், நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னெடுக்கும் வாய்ப்பு ஓ.பி.எஸ்-ற்கு ஆளுநரால் கொடுக்கப்படவில்லை. எனவே, தொகுதி மக்களின் மனநிலையை புரிந்து, மனசாட்சி படி வாக்களியுங்கள் என அவர் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஓ.பி.எஸ்.
 
இந்நிலையில் நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு, சபாநாயகர் தனபாலிடம் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில், வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் முறை பின்பற்றப்பட்டால், சசிகலா தரப்பின் மூலம் ஏதும் பிரச்சனை ஏற்படலாம் என ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏக்கள் அஞ்ச வாய்ப்புள்ளது. இது ஓ.பி.எஸ்-ற்கு நன்றாகவே தெரியும். 
 
மேலும், ரகசிய வாக்கெடுப்பின் மூலம்தான், உண்மையான ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவரும். எனவே, நாளை சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தும். இதற்கு சபாநாயகர் செவி சாய்க்கவில்லை எனில், அவர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் முடிவில் ஓ.பி.எஸ் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, நாளை சட்டசபையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இதில் திமுகவின் நிலைப்பாடு மிகவும் முக்கியம். இன்று மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். யாருக்கும் ஆதரவு இல்லை என மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால், எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுக தரப்பு வாக்களிக்கும் எனத் தெரிகிறது. அதேபோல், ஓ.பி.எஸ் ரகசிய வாக்கெடுப்பு கூறினால், அப்போதைய சூழ்நிலையில் திமுக முடிவெடுக்கும். அதற்கு காங்கிரஸும் துணை நிற்கும் எனத் தெரிகிறது. எனவே, அதிமுகவிற்குள்ளேயே பிரச்சனை ஏற்படும். அதிமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனால், அடுத்து, அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும், திமுக ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபடும். யாருக்குமே பெரும்பான்மை இல்லாமல் போனால், ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அது நடக்க வேண்டும் என்றுதான் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார்.  ஏனெனில், அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளதால், இந்த முறை திமுகவிற்கு மக்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்பது ஸ்டாலினின் எண்ணமாக இருக்கலாம்..

தங்கள் பலத்தை காட்ட அனைவரும் நாளை முயல்வர். எனவே, நாளை சட்டமன்றத்தில் அதிரடி திருப்பங்களுக்கு பஞ்சம் இருக்காது...


இதில் மேலும் படிக்கவும் :