1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (11:56 IST)

வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? தமிழக அரசுக்கு ராமதாஸ் சவால்

தொலைநோக்குத் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்பதை சவாலாகவே முன்வைக்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் (விஷன்) 2023 வெளியிடப்பட்டு 45 மாதங்கள் நிறைவடைந்து விட்டன.
 
ஆனால், தொலைநோக்குத் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான முதல் அடியைக்கூட தமிழக அரசு எடுத்து வைக்கவில்லை.
 
தொலைநோக்கு திட்டம் 2023-ல் 10 வகையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவற்றை 2023 ஆம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என்பது தான் தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கமாகும். 
 
ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இலக்குகளை எட்டுவதில் கண்ணுக்குத் தெரிந்த முன்னேற்றம் எட்டப்பட்டிருக்க வேண்டும்.
 
ஆனால், இலக்குகளை எட்ட நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தொலைநோக்குத் திட்டம் 2023 இலக்குகளை எட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்பதை சவாலாகவே முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.