1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 4 மே 2016 (13:05 IST)

உளுந்தூர்பேட்டையில் தத்தளிக்கும் விஜயகாந்த்: கரை சேருவாரா?

தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு விஜயகாந்துக்கு போதிய வரவேற்பு இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.


 
 
தனது முதல் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், கடந்த தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் விஜயகாந்தின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான இந்த தேர்தலில் அவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் களம் இறங்கியிருக்கிறார்.
 
முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்துடன் களம் இறங்கியிருக்கும் விஜயகாந்துக்கு தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
 
பொதுவாக ஒரு நட்சத்திர வேட்பாளர் களம் இறங்குகிறார் என்றால் அவரை எதிர்த்து களத்தில் உள்ளவர்கள் நட்சத்திர வேட்பாளரை விமர்சித்து தான் பிரச்சாரம் செய்வார்கள். உதாரணமாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி வேட்பாளர்கள் ஜெயலலிதாவை விமர்சித்து தான் பிரச்சாரம் செய்வார்கள்.
 
ஆனால் உளுந்தூர்பேட்டையில் இது அப்படியே தலைகீழாக உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிடும் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக வேட்பாளர்கள் விஜயகாந்தை தங்களுக்கு ஒரு போட்டியாகவே கருதவில்லை. தங்கள் பிரச்சாரங்களில் விஜயகாந்தை கண்டு கொள்வதில்லை; விமர்சிப்பது கிடையாது.
 
இதனால் உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் குறித்தான விவதாங்கள் பேசப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் விஜயகாந்துக்கு அங்கு வரவேற்பு குறைந்துள்ளது. பா.ம.க., வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் பாலு மட்டும் விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் செய்கிறார்.
 
தொகுதியில் தனக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த் வரும் 7 முதல் 14 வரை அங்கு பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருந்த தனது திட்டத்தை மாற்றி நேற்று முன்தினமே தனது தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.