வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:45 IST)

இதுபற்றி பீட்டா குரல் கொடுக்காதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி

ஜல்லிக்கட்டிற்கு எதிராக குரல் கொடுக்கும் பீட்டா அமைப்பு, எண்ணெய் கழிவால் உயிரிழக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்காக குரல் கொடுக்காதது ஏன் என தேமுதிக விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
"கடந்த வாரம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈரானிலிருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும், பனி மூட்டம் காரணமாக எண்ணூர் துறைமுகம் அருகே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கடலில் கலக்கத் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை எண்ணூர் துறைமுகத்தையொட்டி, 24 கிலோ மீட்டர் தொலைவிற்கு கச்சா எண்ணெய் பரவி உள்ளது. புதுச்சேரிக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
எண்ணெய் படலம் கடல் நீரை மூடியுள்ளதால், மீன், ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இதனால் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பின்னடைவை சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே, இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு, வர்தா புயல், நடுக்குப்பம் மீனவ மக்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் போன்ற பல்வேறு இன்னல்களை தொடர்ந்து மீனவர்கள் கடுமையாக எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மீன் விற்பனையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
 
இந்த நிலையில் தற்போது கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ளது. இதனை அகற்றும் பணி ஒப்பந்த அடிப்படையில் பணியாட்கள் மூலம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இருப்பினும் பிற நாடுகளைப்போல நவீன தொழில்நுட்பக் கருவிகள் இல்லாததால், எண்ணெய்யை அகற்றும் பணி மிகவும் மந்தமாக உள்ளது. இதேபோன்ற சம்பவங்கள் உலகின் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளன. அப்போதெல்லாம் அந்தந்த நாடுகளின் அரசுகள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் எண்ணெய் படலத்தையும் நீரில் கலந்த மாசுகளையும் விரைந்து அகற்றிவிடுகின்றன. ஆனால் இங்கோ, மனிதர்களே இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் அவர்களுக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்தியா சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், போதுமான அளவு தொழில்நுட்ப வசதி இல்லாததால் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது, சாக்கடைக்குள் இறங்கி மனிதர்களே சுத்தம் செய்வது, கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை மனிதர்களே அகற்றுவது போன்ற பல்வேறு அவல நிலைகள் நீடித்து வருகின்றன. இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற ஆபத்து நேரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தேவையாக நவீன தொழில்நுட்ப கருவிகள் வைத்துக்கொள்வது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். எனவே, இனி வரும் காலங்களில் பிற நாடுகளைப் போல் தொழில்நுட்ப கருவிகளை அதிக அளவில் வாங்கி மனிதர்களின் சுமையை குறைக்க வேண்டும்.
 
ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தடை வாங்கும் பீட்டா அமைப்பு செத்து மடிந்து கொண்டிருக்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க குரல் கொடுக்காதது ஏன். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றி வரும் பணியாளர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எண்ணெய் படலத்தை அகற்றும் பணி விரைவில் நிறைவடைந்து மீனவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதும் கடல் வாழ் உயிரினங்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் தே.மு.தி.க.வின் விருப்பம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.