செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 18 டிசம்பர் 2014 (16:59 IST)

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் - விஜயகாந்த்

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 
சென்னை மாநகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக, கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளன. கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடும் நிலையும், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவல நிலையும் உள்ளது. ஆனால் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதல் படி நடைபெறும் இந்த ஆட்சியில், 2% சதவிகிதம் மட்டுமே சாலைகள் மழையால் சேதமடைந்து உள்ளதாக இத்துறையின் அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்கிறார்.
 
ஆனால் சேதமடைந்த சாலைகள் இன்னும் அதிக அளவில் உள்ளது என்றும், ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலை பணிகளை செய்ய வில்லை என்றும், தரமற்ற முறையில் சாலைப்பணிகள் செய்ததால் தான் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன என்றும் பொது மக்கள் பலரும் பேசுகின்றனர்.
 
கடந்த ஆட்சியில் போடப்பட்ட சாலைகள்தான் தற்போது சேதம் அடைந்துள்ளதாக அமைச்சர் சொல்கிறார்.  அப்படியானால் அதிமுக அரசு பதவி ஏற்று மூன்றரை ஆண்டுகளாக எந்த சாலையும் போடவில்லையா? சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் சென்னையில் சாலைப் பணிகளுக்கு செலவிடப்பட்டும் கடந்த ஆட்சியாளர்களை காரணம் காட்டி அமைச்சர் உண்மைகளை மூடிமறைக்கலாமா? கடந்த ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தான் நான்கு ஆண்டுகளாக நீடித்து உள்ளதா? உதாரணத்திற்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே இருந்து, சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு செல்லும் சாலை போடப்பட்டு, சுமார் ஒரு வருட காலத்தில் அந்த சாலை போடப்பட்டதன் அடையாளம் கூடதெரியாமல் உருமாறி உள்ளது. இது எந்த ஆட்சியில் போடப்பட்ட சாலை என்பதை அமைச்சர் விளக்குவாரா?
 
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிலோமீட்டர் சாலைகள் சேதம் அடைந்து உள்ள நிலையில், "யானைப்பசிக்கு சோளாப்பொறியாக" சாலைகளை சீரமைக்க ரூபாய் 60 கோடி மட்டும் ஒதுக்கினால், எப்படி அனைத்து சாலைகளையும் சீரமைக்க முடியும். குறிப்பாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் கிலோமீட்டர் கணக்கில் சாலைகள் அரிக்கப்பட்டு கடும் சேதமடைந்துள்ளன. எனவே தமிழகத்தின் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.