செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 16 டிசம்பர் 2014 (11:17 IST)

ஆவின் பால் முறைகேடு பற்றி தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - விஜயகாந்த்

ஆவின் பால் முறைகேடு பற்றி தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆவின் பால் முறைகேட்டில் உள்ள பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி, இது குறித்து தமிழக மக்கள் முழுமையாக தெரிந்து கொள்ள, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கேட்டால், என்மீது அவதூறு வழக்கு போடப்படுகிறது. தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில், அதிமுக அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளையும், மக்கள் பிரச்சனைகளையும், நான் சுட்டிக்காட்டவே கூடாது என்பது தான் ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது.
 
பாலில் தண்ணீர் கலந்து, அந்த கலப்படப் பாலை ஆவின் நிறுவனத்திற்கு வழங்கிய அதிமுகவின் மோசடிப் பேர்வழி வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறியுள்ளதாகவும், அவர்களது நெருங்கிய உறவினர்கள் பலரும் மிகவும் வசதி படைத்தவர்களாக உள்ளதாகவும், பாலில் கலப்படம் செய்ததன் மூலம் சம்பாதித்த பணத்தில் தான் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளார்கள் என அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
 
மேலும் இந்த வழக்கில் வைத்தியநாதனின் மனைவி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இதுநாள் வரையிலும் காவல் துறையால் அவர் கைது செய்யப்படவில்லை என்றும், அவர் முன்ஜாமீன் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக காவல் துறை மெத்தனமாக உள்ளதோ என்ற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மோசடிப் பேர்வழி வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் நெருங்கிய உறவினர்களிடம் இதுநாள் வரையிலும் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? கடந்த மூன்று ஆண்டுகளில் இவர்கள் வாங்கிக் குவித்த சொத்துக்களைப் பற்றி விசாரித்தால் தான் இதில் உள்ள உண்மைகள் வெளிவரும். இதில் அரசு அதிகாரிகள் முதல் ஆளும் கட்சி பிரமுகர்கள் வரை பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தான் இந்த வழக்கு ஆமை வேகத்தில் செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். எனவே நேர்மையான விசாரணைக்கும், உண்மைகளை வெளிப்படுத்தவும், மோசடிப் பேர்வழிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 
 
1 கோடியே 87 லட்சம் லிட்டர் பால் தமிழகத்தில் உற்பத்தியாவதாகவும், தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் வெறும் 22 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே, பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாகவும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். அப்படியானால் மீதியுள்ள சுமார் 1 கோடியே 65 இலட்சம் லிட்டர் பாலை, தனியார் பால் பண்ணைகளும், பெரிய தனியார் பால் நிறுவனங்களும் தான் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்றனர். மிகச் சிறிய அளவான 22 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்வதற்காகவா அதன் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அப்பாவி பொதுமக்களின் வயிற்றில் அடிக்கிறீர்களே இது நியாயமா? ஆவின் நிறுவனத்திற்காக இந்த விலை ஏற்றமா? இல்லை, தனியார் பால் நிறுவனங்களுக்காக ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? என அனைத்து தரப்பு மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
 
எதிர்கட்சிகள் சட்டமன்றத்தில் பால் விலை உயர்வு குறித்தும், முறைகேடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினால், உரிய பதிலைச் சொல்லாமல் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை கொடுப்பதை எதிர்கட்சிகள் எதிர்கின்றனவா? என்று பிரச்சனையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திசைதிருப்புகிறார். தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தும் போது ஏன் எதிர்கட்சிகள் எதுவும் பேசவில்லை என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். அப்படியானால் தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக, எதிர்கட்சிகளை போராட்டம் நடத்த சொல்கிறாரா? தனியார் பால் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, கையாலாகாமல் எதிர்கட்சிகள் மீது பழி சுமத்தலாமா? ஆவின்பால் முறைகேடு குறித்தும், பால்விலை உயர்வு குறித்தும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலேயே இந்த அரசு கவனம் செலுத்துகிறது.
 
பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுப்பதில் தேமுதிகவிற்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை, ஒருலிட்டர் பாலுக்கு ரூ.5 மட்டும் உயர்த்தி கொடுத்துவிட்டு, பொதுமக்களுக்கு ரூ.10 ஆக உயர்த்தி விற்பனை செய்யும் தமிழக அரசின் செயல், "கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல் உள்ளது". அதிமுக அரசு பால் உற்பத்தியாளர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி, மாற்றம் தந்த மக்களுக்கு, ஏமாற்றம் தந்த அரசாக செயல்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.