1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (19:42 IST)

அம்மா பதவி இழந்ததற்காக, நான் பதவியேற்க மாட்டேன் என்று எந்த அமைச்சராவது சொன்னார்களா? - விஜயகாந்த் கேள்வி

அம்மா பதவி இழந்ததற்காக, நான் பதவியேற்க மாட்டேன் என்று எந்த அமைச்சராவது சொன்னார்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மதுரையில் இன்று மின் கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய விஜயகாந்த், ”ஜெயலலிதா மக்கள் முதல்வர் அல்ல, ஊழல் முதல்வர். ஜெயலலிதா மக்கள் முதல்வர் என்றால், ஓ.பன்னீர் செலவம் என்ன முதல்வர்?
 
தமிழக அரசின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் காசு கொடுத்து ஜெயித்தார்கள். மக்களுக்கு என்ன செஞ்சாங்க? மின் கட்டண உயர்வால் மக்களுக்கு வலிக்கிறது, அதனால் எனக்கும் வலிக்கிறது.
 
தண்டனை பெற்ற நீங்கள், வீட்டிக்குள்ளேயே இருந்து செல்போனில் பேசி அதிகாரிகளை இயங்க வைக்கிறீர்கள். ஹெலிகாப்டரில் அந்த அம்மா போனால், தரையில் படுத்து கும்பிடுகிறார்கள் அமைச்சர்கள். வெட்கமாக இல்லையா, அழுதுகிட்டே பதவியேற்றனர் நமது அமைச்சர்கள்.
 
அந்த அம்மா பதவி இழந்துவிட்டாங்க, நான் பதவியேற்க மாட்டேன் என்று எந்த அமைச்சராவது சொன்னார்களா? சொல்ல வேண்டியதுதானே, பதவியை காப்பாத்த அழுதாங்க, மக்களை ஏமாற்றுகிறார்கள்.
 
தமிழ் ஈழத்திற்கு ஆதரவு என்று இப்போது பேசுகிறார்களே, பிரபாகரனை கைது செய்து கொண்டுவர வேண்டும் என்று சொன்னது யார். எனக்கு திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான். அதிமுக ஆட்சி மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. கொலை, கொள்ளை நடக்கிறது.
 
3 வருடமாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எனக்கு காவல் துறையினர் சல்யூட் அடிக்கவில்லை. ஆனால் இந்த அம்மா தண்டனைப் பெற்ற பிறகு சல்யூட் அடிக்கிறாங்க. இன்னைக்கு கூட சல்யூட் அடிச்சாங்க. ஆனால் காவல் துறையினர் நடிக்கக் கூடாது. நேர்மையாக வேலை செய்ய வேண்டும்.
 
நிரந்தர முதல்வர், நிரந்தர முதல்வர் என சொல்கிறார்களே நிரந்தர முதல்வர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தான் மக்கள் கட்சியாக வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.