வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (16:43 IST)

திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? விஜயகாந்த் பதில்

திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இப்போது முடிவு செய்ய முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
 
தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 
விழாவில் பேராயர் எஸ்றா.சற்குணம் பேசியது:-
 
தேமுதிக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு 3 ஆண்டுகளாக வருகிறேன். ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது, இலவு காத்த கிளியாக, இலவம் பழக்குமாக என்று பார்க்கிறேன். ஆனால் பழக்கவில்லை.
 
இனி நீங்கள் (தேமுதிக) இலந்தை பழமாக பழுக்கப் பாருங்கள். அதை நான் பறித்துக் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் (திமுக) சேர்க்கக் காத்திருக்கிறேன்.
 
இந்த முறையாவது இலந்தை பழுக்கும் என்று நினைக்கிறேன். யார் யாரையோ முதல்வராக, பிரதமராக ஆக்கியுள்ளீர்கள். வரும் காலத்தில், கூட வேண்டியர் கூடி, நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றார்.
 
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பின்னர் விஜயகாந்த் பேசியது:-

இலந்தை பழம் பழுப்பது தொடர்பாக எஸ்றா சற்குணம் பேசியது, திமுகவைக் குறிப்பிட்டுத்தான் என எனக்குத் தெரியும்.
 
ஆனால், பழப்பது தொடர்பாக இது முடிவு எடுக்கும் தருணம் இல்லை.
 
இது அரசியல் பேசும் இடமும் இல்லை. கிறிஸ்துமஸ் விழா.
 
அதேசமயம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, சிலர் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடுவதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் வரும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. மக்கள் விரைவில் வெகுண்டு எழுவார்கள் என்றார் விஜயகாந்த்.
 
விழாவில் கேக் வெட்டி விஜயகாந்த் கொண்டினார். ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கியதுடன், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் விஜயகாந்த் வழங்கினார்.
 
பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி, பேராயர்கள் ராஜாசிங், சுந்தர்சிங் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.