வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (14:14 IST)

கிறிஸ்துமஸ் திருவிழா: விஜயகாந்த் பிரியாணி வழங்குகிறார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
 
உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். சாதி, மத, பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், எல்லா மதமும் நம் மதமே என்ற பரந்த சிந்தனையோடு, அனைத்து மதத்தினரின் விழாக்களையும் நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம்.
 
இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு நாளை (22–ந்தேதி) காலை 9.30 மணியளவில் தே.மு.தி.க. சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுகிறது. ‘‘இயன்றதைச் செய்வோம், இல்லாதவருக்கே’’ என்கின்ற நமது கொள்கை முழக்கத்தின் வழியில் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நான் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கி, பல்வேறு நலஉதவிகளும் வழங்க உள்ளேன்.
 
இந்நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம். பேராயர் டி.சுந்தர்சிங், பேராயர் எஸ்.ராஜாசிங் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
 
இவ்விழாவில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் மட்டுமல்லாமல், எல்லா மதத்தினரும் கலந்து கொண்டு, மத நல்லிணக்கத்திற்கும், வகுப்பு ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இவ்விழா அமைந்திட அனைவரும் பங்கேற்க வேண்டும்.
 
தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், தாங்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சிகளில் கிறிஸ்துவ மக்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தங்களால் இயன்ற அளவிற்கு இனிப்பு, கேக்குகள் மற்றும் பிரியாணி போன்றவைகளை வழங்கி, சிறப்பாக கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.