1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (17:16 IST)

சிபிஐ என்னை விசாரிக்கட்டும்; விஜயபாஸ்கர் முதல் குற்றவாளி - ஜெ. மரணம் குறித்து ஓ.பி.எஸ். ஓபன் டாக்

சிபிஐ என்னை விசாரிக்கட்டும். என்ன நடந்தது என்பதை, நான் கூறுகிறேன். நீதி விசாரணையில் உண்மை தெரிய வந்தால், முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அதற்கு முன்னதாக அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பின்பு சசிகலாவிடம் ஏற்பட்ட மோதலால், அதிமுகவில் இருந்து பிறிந்து சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களைக் கண்டறிய சி.பி.ஐ., விசாரணை கோரி பன்னீர்செல்வம் அணியினர், நேற்று மாநிலம் முழுவதும், 33 இடங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடந்த உண்ணாவிரதத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள், அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு என்ன தான் நடந்தது; சமீபத்தில், சுகாதாரத் துறை செயலர் வெளியிட்ட, அரசு அறிக்கையில், ஜெயலலிதா மரணமடையும் சூழல் இருப்பதாக, எனக்கு தெரிவித்ததாகக் கூறி உள்ளார்.

ஆனால், ஜெயலலிதா எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அந்த அறிக்கையை, அரசு செயலர் ராதாகிருஷ்ணன், உடனே வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது வழக்கு தொடர்வேன்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற, அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில், ஏழு பேரை நிறுத்தி இருந்தார். அவர்கள், ஆளுக்கொரு பேனா வைத்திருப்பர். 'பன்னீர்செல்வம் வந்தார்; உட்கார்ந்தார்; எழுந்தார்' என எழுதி, அவரிடம் தெரிவிப்பர். அங்கு வருவோர் விபரங்களை குறிப்பெடுத்து, விஜயபாஸ்கரிடம் கொடுப்பர்.

முதலில் எனக்கு தெரியவில்லை. பத்து நாட்களாக, அவர்கள் ஒரே இடத்தில் நிற்பதை பார்த்து, கேட்டபோது தான், விஜயபாஸ்கர் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறினர். 'நீதி விசாரணை அமைத்தால், பன்னீர்செல்வத்தை முதலில் விசாரிக்க வேண்டும்' என, விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

நான் தானே, 'நீதி விசாரணை வேண்டும்' எனக் கேட்கிறேன். சி.பி.ஐ., விசாரணை வந்தால் தான், மரணத்தில் புதைந்துள்ள மர்மம் மற்றும் உண்மைகள் தெரிய வரும். என்னை விசாரிக்கட்டும்; என்ன நடந்தது என்பதை, நான் கூறுகிறேன். நீதி விசாரணையில், உண்மை தெரிய வந்தால், முதல் குற்றவாளி விஜயபாஸ்கர் தான்.

சசிகலா குடும்பத்தினர் அவரது குடும்பத்தில் ஒருவரை கட்சியிலும், ஆட்சியிலும் கொண்டு வர வேண்டும் என சதி செய்தனர். அந்த சதி திட்டம், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்திடம் இருந்து, அதிமுகவை காப்பாற்ற, இந்த தர்மயுத்தம் துவக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் பினாமி ஆட்சிக்கு ஆதரவாக, 122 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மக்கள் நம்முடன் உள்ளனர். பினாமி ஆட்சியை, யார் நடத்துகிறார் என்பதை, மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். உரிய நீதி விசாரணை வந்தால் மட்டுமே, மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு விலகும். நீதி விசாரணை வரும் வரை, நமது போராட்டம் தொடரும்”: என்று தெரிவித்துள்ளார்.