1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2017 (15:36 IST)

ரூ.5.50 கோடி சிக்கிய விவகாரம் - சி.பி.ஐ விசாரணையில் விஜயபாஸ்கர்?

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ரூ.5.50 கோடி பணம் எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ரூ.5.50 கோடி பணமும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியது. 
 
இதனையடுத்து, அது தொடர்பாக விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கடந்த சில நாட்களாக விளக்கம் அளித்தனர். ஆனால், அவர்களிடமிருந்து சரியான விளக்கத்தை பெற முடியாததால், மீண்டும் அவர்கள் இருவரும் வருகிற திங்கட்கிழமை(17ம் தேதி) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். எனவே அன்று விசாரணை திவிரமாக்கப்படும் எனத் தெரிகிறது. 
 
இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.5.50 கோடி பணம் குறித்து, வருமான வரித்துறையினர்,  சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஏனெனில்,  புதிய 2 ஆயிரம் நோட்டுகள் எப்படி கட்டு கட்டாக கொண்டு வரப்பட்டது என அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 
எல்லாவற்றையும் வருமான வரித்துறையினர் விசாரிக்க முடியாது என்பதால்,  ரூ.89 கோடி விவகாரத்தை வருமான வரித்துறையினரும், ரூ.5.50 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து அமலாக்கத்துறையினரும் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. அதேபோல், ரூ.5.50 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக பதுக்கி வைத்திருந்த விவகாரம் சிபிஐ தரப்பிற்கு செல்லும் எனத் தெரிகிறது. ஏனெனில் புதிய நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றிய விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
எனவே, ரூ.5.50 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்  சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வாய்ப்பிருக்கிறது.
 
எனவே, விஜயபாஸ்கர் உண்மையை கூறாவிடில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) என மூன்று கட்ட விசாரணைகளை அவர் சந்திக்க வேண்டி வரும் எனத் தெரிகிறது.