1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : சனி, 23 ஜூலை 2016 (13:01 IST)

கபாலியும் அதில் இருக்கும் அரசியலும்

கபாலியும் அதில் இருக்கும் அரசியலும்

கபாலியில் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர்  பா.ரஞ்சித்?


 


கபாலி - முதலாளித்துவத்துக்கும், தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கும், சாதிய அடக்கு முறைக்கும், போதை பொருட்களுக்கும் எதிரான படம்.

படம் முழுக்க நிரம்பி இருப்பது இயக்குனர் ரஞ்சித்தின் ஆதங்கமே. தான் கூற நினைக்கும் அனைத்தையும், மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும், ரஜினியை வைத்து தீர்த்து கொண்டுள்ளார். 

அம்பேத்கர் மணிமண்டபத்தை, படத்தில் சொல்லப்படும் விலாசத்தில் தேவை இல்லாமல் திணித்துள்ளார். ரஜினி அணியும் உடையிலும் அதிகப்படியான அரசியல். கீழ் ஜாதிகாரன் கோர்ட் அணிந்தால் மேல் ஜாதிக்காரனுக்கு வரும் பொறாமையையும், வயிற்றெரிச்சலையும் நேரடியாக சொல்லாமல், கீழ் ஜாதிகாரன் இடத்தில் தமிழர்களையும், மேல் ஜாதிகாரன் இடத்தில் மலேசியனையும் வைத்து உயர் ஜாதிகாரன் மனநிலையை கூறுகிறார்.


 


தமிழர்களை நண்டுகளுடன் ஒப்பிட்டு, அடுத்தவன் வளர்ச்சியை கெடுக்கும் மனப்பான்மை உடையவர்கள் என்று கூறவருகிறார். அதே சமயம், சென்னையில் உள்ளவர்கள் நல்லவர்கள் போல் சித்தரித்துள்ளார்.

ஒருவருக்கே அனைத்து சலுகைகளும் போவதை தட்டி பறிக்க வேண்டும் என்று ஆணித் தரமாய் கூறுகிறார். சமீபத்தில் நடிக்க வந்தவர்களை தேர்வு செய்து ரஜினிக்கு எதிராக நின்று வசனம் பேசுவதிலும் மறைமுக அரசியல் இருக்கிறது. ரஜினி மட்டுமே பெரிய நடிகர் இல்லை, அவரை மீறியும் இளம் தலைமுறையினர் நடிப்பு துறைக்கு வரலாம் என்பதும் அவருக்கு எதிராக நின்று சமமாக வசனம் பேசலாம் என்றும் கபாலி மூலம் ரஞ்சித் கூற வருகிறார்.

பெண்கள் பனியன் பேண்ட் அணிவது அவர்கள் சவுகரியத்திற்காகவே தவிர அது தங்களை கவரத்தான் என்று ஆண்கள் தவறாக புரிந்துகொண்டு பெண்களை ஆபாசமாக பார்க்கக் கூடாது என்று அவர் தன்ஷிகா மூலம் சொல்லாமல் சொல்கிறார்.


 


எவ்வளவு பெரிய நடிகரானாலும் சாமானியன் கூட வீழ்த்தி விட்டு போகலாம் என்ற கருத்தை வெளிப்படையாக கூறாமல், கவனமாக மறைத்துள்ளார். ரஜினி இறப்பது போல் காட்டினால், ரசிகர்களுக்கும் ஏமாற்றம் வரும். படமும் ஓடாது என்பதால் இறுதியில் ரஜினியை சுட்டு கொலை செய்வதை தவிர்த்துள்ளார். மறைக்கப்பட காட்சிக்கும் எதிர்ப்பு வராமல், ரஜினியும் சாமானியனை சுட்டு இருக்கலாம் என்று ரஜினியின் ரசிகர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று ஒரு பக்கம் ரசிகர்களையும் திருப்திபடுத்துகிறார்.

கபாலி பார்த்த பின்பு, இயக்குனர் ரஞ்சித், ரஜினி மூலம் கூறும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது, ”காந்தி கோர்ட்ட கழட்டியதிற்கும் ஒரு அரசியல் இருக்கு, அம்பேத்கர் கோர்ட்ட அணிந்ததற்கும் ஒரு அரசியல் இருக்கு”.

”கபாலியிலும் அரசியல் இருக்கு கபாலியாய் ரஜினியை நடிக்க வைத்ததிலும் பல அரசியல் இருக்கு…………………………..”

  - தினேஷ்