வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (16:42 IST)

வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா விடுதலை சிறுத்தை கட்சி?

வைகோ ஏற்படுத்திய கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தை வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தலைமையில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் என மொத்தம் ஆறு கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டணியாக உருவாகின. இந்த கூட்டணியே அதிமுக., திமுக.வுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 
 
முதலில் இந்த அணியில் இருந்து தமிழருவி மணியன் வெளியேறினார். அதன் பின் சமீபத்தில், மனிதநேய மக்கள் கட்சியும் வெளியேறி விட்டது. கடைசியில் நான்கு கட்சி கூட்டணியாக இருந்தது இந்தக் கூட்டணி.
இந்நிலையில், விடுதலை சிறுத்தையும் அந்தக் கூட்டணியிலுருந்து வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதாவது, நேற்று காஞ்சீபுரத்தில் வைகோ தொடங்கி இருக்கும் மறுமலர்ச்சி பயணத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது. இது பற்றி பேசிய காஞ்சிபுரம் மாவட்டா செயலாளர் விடுதலை செழியன்  “மறுமலர்ச்சி பயணத்தில் பங்கேற்க மதிமுக எங்களை அழைப்பு விடுக்கவில்லை. இதில் கலந்து கொள்ள சொல்லி எங்கள் கட்சியின் தலைமையும் உத்தரவிடவில்லை’’ என்று கூறினார்.
 
ஆனால் இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வைகோ, திருவாரூரில் நான்கு கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி கட்சி பற்றிய அறிவிப்பு நாளை அக்.5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
அதில், விடுதலைச் சிறுத்தை இடம் பெற்றிருக்குமா என்பது நாளைதான் தெரிய வரும்.