வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2016 (11:09 IST)

கண்டெய்னரில் பிடிபட்ட ரூ. 570 கோடி எண்ணும் வீடியோ

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது திருப்பூர் அருகே பிடிபட்ட ரூபாய் 570 கோடியை எண்ணும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
 

 
கடந்த மே மாதம் 13ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் அவினாசி அருகே பெருமாநல்லூரில் - குன்னத்தூர் சாலையில் 3 கண்டெய்னர் லாரிகள் வரிசையாக வந்தன.
 
தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தியபோது, 3 கண்டெய்னர் லாரிகளில் வந்த 15 பேர் தங்களை ஆந்திர மாநில காவல் துறையினர் என்றும், கோவையில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளைக்கு பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததாக குற்றம் சாட்டப்பட்டது.
 
பின்னர், அவர்கள், வங்கியில் இருந்து கொண்டு வந்த பணம் என்று கூறினாலும் நகல் ஆவணங்கள் மட்டுமே இருந்ததால் 3 கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி இருந்தனர்.
 
பிறகு, கண்டெய்னரில் உள்ள ரூ. 570 கோடி ரூபாய் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்று அவ்வங்கி உரிமை கொண்டாடியது. மேலும், பணத்தை ரிசர்வ் வங்கி அனுமதியுடன் தான் கோவையிலிருந்து கொண்டு வருவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
பின்னர், பணம் கோவை ஸ்டேட் வங்கி கிளையிலிருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள வங்கிக் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், இந்தப் பணம் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அரசியல் கட்சி ஒன்றுக்குச் சொந்தமானது என சில கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன. இது குறித்து புலனாய்வுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
 
பின்னர், இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும் சிபிஐயும் விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி திமுக சார்பில் பிரதமர், சிபிஐ இயக்குனர், உள்துறை அமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரி திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனையேற்று சென்னை நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் பெற்றுள்ளார்.

வீடியோ இங்கே: