வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (13:54 IST)

விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் – பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெருகும் ஆதரவு !

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக சென்னையில் வரும் 14 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப் பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்தக் கொடுமைக்கெதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். திமுக ஏற்கனவே போராட்டம் அறிவித்தும் அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் மார்ச் 14 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையாகத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானே முன்வந்து தனது மேற்பார்வையின்கீழ் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இதற்காக வரும் 14 ஆம் தேதி காலை சென்னையில் எனது தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கும்பலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் இருப்பதாகவும் அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அதிகாரத்தில் உள்ள சிலர் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் அதை ஆளுங்கட்சியினர் மறுத்தனர். ஆனால், இப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த 'பார்' நாகராஜ் என்பவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு அதிமுக அம்மா பேரவைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். டாஸ்மாக் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தியதால் அவரை 'பார்' நாகராஜ் என்று எல்லோரும் அழைப்பதாகத் தெரிகிறது. அவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புகார் அளித்த மாணவியின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் பிப்ரவரி 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 'பார்' நாகராஜ்  அடுத்த நாளே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். அதிலிருந்தே அவரது அரசியல் பலத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒருபுறம் சிலர்மீது குண்டர் சட்டம் போடுவதாக கூறிக்கொண்டு இன்னொரு புறம் முக்கியக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஆளும் கட்சி ஈடுபடுகிறதோ என்ற ஐயத்தை இது வலுப்படுத்துவதாக உள்ளது. 'பார்' நாகராஜின் கூட்டாளிகள் பலர் ஆளும் கட்சியில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த வழக்கை காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைகளைக் கருத்தில்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தனது மேற்பார்வையின்கீழ் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நான்கு பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அதில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார். 'பார்' நாகராஜ் உட்பட அதில் தொடர்புடைய அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் சனாதன கருத்தியலுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் வெறுப்பு குற்றங்களும் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிப்பதற்கு இங்கே செல்வாக்கு பெற்றுவரும் சனாதன சக்திகளே முதன்மையான காரணமாக உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பெருகிக்கொண்டே போகின்றன. போக்சோ சட்டம் உட்பட பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்கள் தமிழ்நாட்டில் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின்கீழ் பதியப்படும் வழக்குகளில் 21.5% வழக்குகளில் மட்டும் தான் தண்டனை கிடைத்துள்ளது என 2016 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை கூறுகிறது.எனவே, இந்தப் பிரச்சினையில் தேசிய மகளிர் ஆணையமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்