1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (20:14 IST)

வைரமுத்து எழுதிய சிறுகதைகள் : கருணாநிதி வெளியிடுகிறார்

கவிஞர் வைரமுத்து எழுதிய  வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல்படியைப் பெற்றுக்கொள்கிறார்.

அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் விழா நடக்கிறது. டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை பர்வீன் சுல்தானா இருவரும் சிறுகதைகளைத் திறனாய்வு செய்து பேசுகிறார்கள். கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.
 
ஒரே பத்திரிகையில் ஒரே எழுத்தாளர் 40 வாரங்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியது இதுவே முதல் முறையாகும். வெளிவந்துகொண்டிருந்தபோதே இதில் சில கதைகள் தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடங்களாக இடம்பெற்றிருக்கின்றன. எம்ஃபில் ஆய்வு செய்வதற்காகப் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இது கவிஞர் வைரமுத்துவின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். கலைஞர் வெளியிடும் கவிஞர் வைரமுத்துவின் 17ஆவது நூலுமாகும்.
 
“புதுமைப்பித்தன் இறந்த ஆண்டில்தான் நான் சிறுகதை எழுதவந்தேன் என்ற ஜெயகாந்தன் வாக்குமூலத்தைப்போல, ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன். என் முன்னோடிகளால் எழுதப்படாத மிச்சத்தையும், அவர்களால் வாழப்படாத வாழ்க்கையையும் என் சிறுகதைகளில் நான் கலைப்படுத்தியிருக்கிறேன். இது பத்து மாதங்களில் எழுதப்பட்டதுதான்; ஆனால் இதை எழுதுவதற்குக் காலம் என்னை 60 ஆண்டுகள் தயாரித்திருக்கிறது. இதில் புத்தரையும் எழுதியிருக்கிறேன்; கசாப்புக் கடைக்காரனையும் எழுதியிருக்கிறேன்.

வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது இலக்கியம் பூப்பறித்துக் கொண்டிருக்கமுடியாது. அதனால் எரியும் பிரச்சனைகளும் எழுதப்பட்டுள்ளன. கெளரவக் கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும் காதல் கொலைகள் முதல் இலங்கை இனப்படுகொலை வரை எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு சிறுகதையையும் பத்துமுதல் பன்னிரண்டுமுறை திருத்தியிருக்கிறேன்; வார்த்தைகளைத் தங்க நாணயம்போல் செலவழித்திருக்கிறேன்” என்று தம் சிறுகதை அனுபவங்களைப் பற்றிச் சொல்லுகிறார் கவிஞர் வைரமுத்து.
 
வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார், வெங்கடேஷ், தியாகராஜா, தமிழரசு, வேலு, ராஜசேகர், மாந்துறை ஜெயராமன், செல்லத்துரை, கணேஷ் பாபு ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.