வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 29 நவம்பர் 2014 (11:34 IST)

" வைகோ, கூட்டணியிலிருந்து தூக்கியெறியப்படுவதற்கு முன்பே வெளியேறிவிட வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி

வைகோ, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தூக்கியெறியப்படுவதற்கு முன்பே அவராக வெளியேறிவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில தினங்களாகவே வைகோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். நேற்றைய கூட்டத்தில் கூட, 'இலங்கையில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து கூறியதன் மூலம் பிரதமர் பதவியை அவர் களங்கப்படுத்தி விட்டார்' என்று கூறியிருந்தார்.
 
மேலும், 'தமிழகத்தில் இந்தியைத் திணித்தால், தமிழகம் தனித்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை' எனவும் கூறியிருந்தார்.
 
சில வாரங்களுக்கு முன்பு தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், 'இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மோடியை வைகோ விமர்சித்தால், இனியும் பாஜக பொறுத்துக் கொள்ளாது' என்று கூறினார். ஹெச்.ராஜாவும் இதே போன்று வைகோவை விமர்சித்திருந்தார்.
 

 
இந்நிலையில் 'வைகோவிற்கு எனது செய்தி' என்று குறிப்பிட்டு சுப்பிரமணிய சுவாமி நேற்று தனது டிவிட்டரில், "நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தூக்கியெறியப்படுவதற்கு முன்பே வெளியேறிவிட வேண்டும். நடந்து கொண்டிருக்கும் எதிர்மறையான நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது அப்படித்தான் நிகழப்போகிறது" என்று கூறியுள்ளார்.