வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2015 (12:42 IST)

தமிழக மீனவர்களைக் கிரிமினல்கள் என்று கருத்துக் கூறுவது மன்னிக்க முடியாத செயலாகும் - வைகோ

தமிழக மீனவர்களை சர்வதேச கடத்தல்காரர்களைப் போல சித்தரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதற்கு மதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, கடலில் மீன் பிடித் தொழிலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசின் கடலோர காவல்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிங்களக் கடற்படை நமது கடல் எல்லைக்குள் நுழைந்து இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், துப்பாக்கிச் சூடு நடத்துவதையும், மீன்பிடி கருவிகளை பறிமுதல் செய்யும் அக்கிரமத்தையும் தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை செயல்படுத்த முன்வராத மத்திய அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 27 அன்று விசாரணைக்கு வந்தபோது, இந்தியக் கடல் எல்லையில் மீன் வளம் குறைந்ததால், நமது மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.
 
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, நமது மீனவர்கள் தங்கம், போதைப்பொருட்கள் கடத்துகின்றனர். தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துகின்றனர். இலங்கை மீனவர்களின் மீன்பிடி கருவிகளை தமிழக மீனவர்கள் சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்களின் சட்ட விரோத செயல்களால்தான், இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது.
 
சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக 2014 ஜனவரி முதல் தற்போதுவரை இந்திய மீனவர்களின் 185 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 937 மீனவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கைக் கடல் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்ட படகுகளின் பதிவு எண்களை இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்தியக் கடல் எல்லையில் மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கியதாக இதுவரை கடலோர காவல்படைக்கு எவ்வித புகாரும் வரவில்லை, இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்குகின்றனர் என்பது தவறானது என்று இந்தியக் கடலோர காவல் படையின் துணை தலைமை இயக்குநர் சார்பில், மத்திய அரசின் வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
மத்திய அரசு சார்பில் மேற்கண்டவாறு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுத் தள்ளுவோம் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதற்கும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக மீனவர்களைக் குற்றம் சாட்டி மத்திய அரசு தற்போது மனு தாக்கல் செய்துள்ளதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து நமது மீனவர்களை சுடுவதும், படகுகள் மற்றும் பிற கருவிகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகளாகிவிட்டது.
 
இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கத் தவறிய மோடி அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக, தமிழக மீனவர்களைக் கிரிமினல்கள் என்று கருத்துக் கூறுவது மன்னிக்க முடியாத செயலாகும்.
 
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.