செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (16:51 IST)

இலங்கை அரசுடனான தூதரக உறவை இந்தியா முறிக்க வேண்டும் - வைகோ

இலங்கை இராணுவ அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாகச் சித்தரித்து, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மனதால் நினைத்துக் கொண்டு கடிதங்கள் எழுதுவதாகப் புகைப்படம் வெளியிட்டு இருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள வைகோ, இலங்கை அரசுடனான தூதரக உறவை முறிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களுக்கு என்ன பொருள்?’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையும், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளிவந்துள்ளது.
 
இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கொடூரமான வக்கிர புத்தியை அப்படியே வெளிப்படுத்தும் விதத்தில் இவை அமைந்து இருக்கின்றன. ஹிட்லரின் நாஜிப்படைகள் கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைத்த இலங்கை இராணுவம், தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் உள்ள ஜெயலலிதாவை இழிவுபடுத்தத் துணிந்து இருக்கின்றது. இத்தகைய கேவலமான வக்கிர எண்ணம் படைத்த இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடு மன்னிக்கவே முடியாத வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
 
தமிழக முதல்வர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதுவது வெறும் கடிதங்கள் அல்ல. இலங்கை அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகி, நாள்தோறும் இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை இந்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று வைக்கப்படும் கோரிக்கைதான் முதல்வரின் கடிதங்கள்.
 
ஆனால், இலங்கை இராணுவ அமைச்சகத்திறகு எத்தகைய மண்டைக் கொழுப்பும் ஆணவமும் இருந்தால், இந்திய அரசையும் தமிழக அரசையும் துச்சமாக நினைத்து தமிழக முதல்வர் மீது கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்யத் துணிவார்கள்? தமிழக முதலமைச்சரைக் கிள்ளுக்கீரையாக இலங்கை அரசு நினைப்பதற்கு யார் காரணம்? எவர் கொடுத்த துணிச்சல்?
 
இராஜபக்சே கைக்கூலியும் தமிழினத் துரோகியுமான சுப்பிரமணிய சுவாமியை இந்திய அரசின் தூதராக இலங்கைக்கு அனுப்பி, இராஜபக்சேவுடன் கைகுலுக்கச் செய்து சிங்கள அரசுக்கு இந்தியா துணையாக இருக்கும் என்று தெரிவித்ததுதான் இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறலுக்குக் காரணம். இதுமட்டுமின்றி, இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கட்டுரையில் “பாரதிய ஜனதா கட்சியின் முழு அதிகாரமிக்க உயர்நிலைக்குழு சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் கொழும்பு வந்து, இராஜபக்சேவைச் சந்தித்தது. இந்திய - இலங்கை ராஜீய உறவுகளைத் தமிழ்நாடு தீர்மானிக்க முடியாது. இதில் ஜெயலலிதாவின் தந்திரோபாயங்கள் எதுவும் எடுபடாது. இந்திய-இலங்கை கடல் எல்லை பற்றியும், கச்சத்தீவு குறித்தும் 1974 மற்றும் 1976 இல் இரு அரசுகளும் செய்து கொண்ட உடன்பாடு இறுதியானது; மாற்றத் தக்கது அல்ல. இதை மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா கூப்பாடு போட்டு, புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை. இலங்கைக் கடல்வளத்தைத் தமிழக மீனவர்கள் கொள்ளை அடிப்பதை அனுமதிக்க முடியாது” என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
 
இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.
 
எனவே, இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.