1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (16:58 IST)

நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது - வைகோ

நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதாலும் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, விவசாயம், தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அறிக்கையில் வைகோ கூறியிருப்பதாவது,
 
ரகுராம் ராஜன் குழுவின் ஆய்வு அறிக்கை 2013, செப்டம்பர் 26 இல் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. கடந்த அறிக்கையில் இநதியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த 7 மாநிலங்களின் பட்டியலில் கோவா, கேரளாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இருந்ததாகவும், பஞ்சாப், மராட்டியம், உத்ரகாண்ட், ஹரியானா போன்றவை இதர வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்சசி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. 2013, செப்டம்பரில் ரகுராம்ராஜன் குழு அறிக்கையில், பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மத்திய புள்ளியியல் நிறுவனம், பீகார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10.73 விழுக்காடு என்றும், தமிழகம் 3.39 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறுகிறது.
 
2011 - 12 இல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.39 விழுக்காடு இருந்தது. 2012 - 2013 இல் 3.39 விழுக்காடு என்று வீழ்ச்சி அடைந்துவிட்டது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), சேவைத்துறை 45 விழுக்காடு, தொழில்துறை 34 விழுக்காடு, விவசாயத்துறை 21 விழுக்காடு பங்களிப்பை அளிக்கின்றன. முதன்மை துறையாக உள்ள விவசாயத்துறை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் துறையும் சரிந்துவிட்டது.
 
கடந்த மூன்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால், விவசாயத்துறை மட்டுமின்றி தொழில்துறையும் பாதிக்கப்பட்டது. கோவையில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் மின்வெட்டு. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாயின. கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அங்கு தொழிற்துறை உற்பத்தியை இழந்தது.
 
பயிரிடப்படும் நிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டே போவதும், நல்ல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுத்தும், நீர் ஆதாரங்களைப் பெருக்க ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், முறையாக தூர்வாரியும் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்துறையை வளர்க்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பை ஆதிகரிக்க வேண்டும்.
 
தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 1.27 இலட்சம் கோடி ரூபாயில், இலவச திட்டங்களுக்கு மட்டும் 250 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட மதுக்கடைகளை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஜெயலலிதா அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளும், நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதாலும் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம், தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.