வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 20 ஜூன் 2015 (02:02 IST)

உடன்குடி மின் திட்டம் எங்கே போனது? தமிழக அரசுக்கு கருணாநிதி கேள்வி

உடன்குடி மின் திட்டம் எங்கே போனது? என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 
 
இந்த உடன்குடி மின் திட்டம் பற்றிப் பல முறை பேசப்பட்டு விட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட இந்த உடன்குடி மின் திட்டத்தை 2012ஆம் ஆண்டு ரத்துச் செய்து விட்டு, தமிழக மின் வாரியம் மட்டும் தனித்தே அந்தத் திட்டத்தைத் தொடங்கப்போவதாகவும், 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா 24-2-2012 அன்று அறிவித்தார்.
 
இதற்கான டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டதில், சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், "பெல்" நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விலைப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்படவேண்டும். ஆனால் நீண்ட இழுபறிக்குப் பின் 2014ஆம் ஆண்டு நவம்பரில்தான் விலைப் புள்ளி திறக்கப்பட்டது.
 
ஆனால், அதற்குப் பிறகும் முடிவெடுக்காமல், இந்த ஆண்டு மார்ச் திங்களில், அந்த டெண்டரில் ஏதோ குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அந்த டெண்டரை மூன்றாண்டுகளுக்குப் பிறகு ரத்துச் செய்தார்கள். புதிய டெண்டரைக் கோரிப் பெற்று, அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சொன்னார்கள். ஆனால் கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கோரிய போது, விண்ணப்பித்த சீன நிறுவனக் குழுமத்தினர் தங்களுடைய டெண்டரை ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.
 
17-6-2015 அன்று வந்த செய்தியில், "தூத்துக்குடி மாவட்டத்தில், உடன்குடியில், தலா, 660 மெகாவாட் திறனுடன் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான டெண்டர் கோரப் பட்டது. இந்த டெண்டரில் பாரதக் கனரக மின் நிறுவனமான "பெல்", மற்றும் சீன-இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகியவை கலந்து கொண்டன. "பெல்" நிறுவனத்தை விட, குறைவான தொகையை, சீன நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதற்குப் பதில், அந்த நடவடிக்கையை ரத்துச் செய்து, தமிழக மின் வாரியம் உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு கடந்த மார்ச்சில் பிறப்பிக்கப்பட்டது. தொழில் நுட்பக் குறைபாடுகள் இருப்பதால், இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளியை ரத்துச் செய்வதாகக் கூறப்பட்டது.
 
மின் வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதி மன்றத்தில், சீன நிறுவனம், மனு தாக்கல் செய்தது. இந்த மனு நிலுவையிலே இருக்கும்போதே, உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பாக வேறொரு டெண்டரை மின் வாரியம் கோரியது. அதில் "பெல்" நிறுவனம் மட்டுமே கலந்து கொண்டது. அதைத் தொடர்ந்து சீன நிறுவனம், நீதிமன்றத்தில் டெண்டர் விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மின் வாரியத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று இடைக்கால மனுவினைத் தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, புதிய டெண்டருக்கான ஒப்பந்தப் புள்ளியைத் திறக்கக்கூடாது என்று மின் வாரியத்திற்குத் தடை விதித்திருக்கிறார்"" என்று கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட""திரிசங்கு" நிலையில்தான் உடன்குடி மின் திட்டம் உள்ளது.
 
எப்படியாவது உடன்குடி மின் திட்டப் பணியை, ஏதோ உள் நோக்கத்தோடு, "பெல்" நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்பதில் அதிமுக அரசு தீவிரமாக உள்ளது. அது ஏன் என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
 
யாராவது அமைச்சரின் மகனுக்கோ அல்லது மூத்த அதிகாரி ஒருவரின் மருமகனுக்கோ எப்படியாவது சலுகை காட்ட வேண்டும் என்பதற் காகத்தான் இந்தத் திட்டம் இழுபறியில் இருப்ப தாகக் கூறப்படுகிறதே; அதுதான் உண்மையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.