திவாகரனோடு கை கோர்த்த தினகரன் - பொறுத்திருந்து பாருங்கள்


Murugan| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (14:15 IST)
நானும் தினகரனும் ஒன்றாக இணைந்துதான் செயல்படுகிறோம். எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
சிறைக்கு செல்லும் முன் துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தார் சசிகலா. அதன் பின் கட்சியின் தலைமையாக தன்னை காட்டிக்கொண்ட தினகரன், திவாகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிட விடாமல் தடுத்ததாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில், சசிகலாவின் அண்ணியும், தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி சமீபத்தில் மரணமடைந்தார்.  அது தொடர்பாக துக்க நிகழ்ச்சியில் திவாகரன் மற்றும் தினகரன் இரண்டு பேரும் கலந்துகொண்டனர். 
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் “யாருக்கும் எந்த வித அரசியல் நெருக்கடியும் கிடையாது. அதிமுவிற்கு தற்போது சோதனையான காலகட்டமாகும். மகாபாரத போரில் சக்கர வியூகத்தில் மாட்டிக்கொண்ட அபிமன்யூ போல் அதிமுக சிக்கியுள்ளது. அதை விரைவில் மீட்டெடுப்போம். அதேபோல் எனக்கும், தினகரனுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது” எனப் பேசினார்.
 
அதன் பின் பேசிய தினகரன் “துக்க வீட்டில் அரசியல் பேச விரும்பவில்லை. அதிமுகவில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” எனக் கூறினார்.
 
இரண்டு மாதம் தன்னை பொறுமையாக இருக்கும் படி தன்னிடம் சசிகலா கூறியதாக ஏற்கனவே தினகரன் கூறியிருந்தார். அந்த கெடு வருகிற ஆகஸ்டு 5ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில்தான் ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என அவர் கூறியிருக்கிறார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :