Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டி.டி.வி.தினகரன் போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை வரும்: டி.ஆர்.பி. ராஜா


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (17:14 IST)
விரைவில் போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலையும் வரப் போகிறது என்ற ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் “தளபதி பற்றி விமர்சித்து” தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள திரு.டி.டி.வி. தினகரன் முயலுகிறார் என டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திரு டி.டி.வி.தினகரன் அந்நியச் செலாவனி மோசடி குற்றம் புரிந்தவர் என்று சென்னை உயர்நீதிமன்றமே கூறிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறைத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம் தினகரனின் சொந்தங்கள் அடங்கிய “முகமூடி அணிகள்” எப்படி பொதுச் சொத்தை கொள்ளையடித்தார்கள் என்பதை சுட்டிக்காட்டி விட்டது. ஒரு வேளை அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்கவில்லையென்றால் “சூப்பர் டூப்பர்” சகவாசம் கொண்ட டி.டி.வி. தினகரன் ஒரு முறை படித்துப் பார்த்து “குற்றவாளி” என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாமே தவிர இது மாதிரி “தகரடப்பா” போன்ற தரங்கெட்ட, துருப்பிடித்த அறிக்கைகளை விடக்கூடாது.

சொத்துக் குவிப்பு வழக்கில் “தன்னை அரசியலில் காலூன்ற வைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா” மீதான வழக்கை விரைவுபடுத்தி,  சிறைதண்டனையை உறுதிபடுத்த “லண்டன் ஹோட்டல்” வழக்கிலிருந்து தப்பித்துக் கொண்ட ஞாபகம் திரு டி.டி.வி.தினகரனுக்கு திடீரென்று வந்திருக்கிறது. அந்த “தப்பித்த அனுபவத்தில்” இப்போது “தான் திருடி பிறரை நம்ப மாட்டார்” என்பது போல் தலைவர் கலைஞர் அவர்களையும், தளபதி அவர்களையும் விமர்சிக்க முயன்றிருக்கிறார்.

இந்த மாபெரும் இயக்கத்தின் அந்த தலைவர்களை விமர்சிக்க அருகதையோ யோக்யதையோ மருந்துக்குக் கூட உங்களுக்கு இல்லை என்பதை முதலில் உணர வேண்டும்.

இன்றைக்கு, “சசிகலாவின் கணவர் எம். நடராஜனை மருத்துவமனைக்கு அனுப்பியாச்சு”, “திரு திவாகரனையும் அவரது சொந்தங்களையும் விரட்டியடிச்சாச்சு” “திருமதி சசிகலாவோ பெங்களூர் சிறையில்” என்ற அகங்காரத்தில் ஒரு புறமும், “ஓ.பி.எஸ்”ஸையும் வெளியேற்றியாச்சு” “இ.பி.எஸ்”ஸையும் அடக்கி வச்சாச்சு” என்று இன்னொரு புறம் கனவும் கண்டு கொண்டிருக்கும் திரு டி.டி.வி. தினகரனின் சாயம் வெளுத்துப் போச்சு என்பதை ஏனோ அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

“முகத்திரை” போட்டுக்கொண்டோ “முக்காடு” போட்டுக் கொண்டோ இனியும் அதிமுக தொண்டர்களை ஏமாற்ற முடியாது என்பது இன்று “ஓ.பி.எஸ். அணி” நடத்திய உண்ணாவிரதத்தில் பகிரங்கமாகத் தெரிந்து விட்டதால், அத்துமீறி நுழைந்து இருக்கின்ற போயஸ் தோட்டமும் பறிபோய்விடுமோ என்ற பீதியில் திரு டி.டி.வி.தினகரன் தளபதியைப் பார்த்த “பிதற்றல் அறிக்கை” ஒன்றை எழுதச் சொல்லி வெளியிட்டுள்ளார்.

“ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் வேண்டும்” என்றும் “ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக போய்விடக்கூடாது என்பதும்தான் எங்கள் தர்ம யுத்தம்” என்று உண்ணாவிரதம் இருந்த ஓ.பி.எஸ். அணியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல வக்கற்ற திரு டி.டி.வி.தினகரன் “நானும் அரசியல்வாதிதான்” என்று அடாவடியாக அதிமுகவினரை மிரட்டலாம். “எடுபிடிகளாக” கை கட்டி நிற்கும் நிர்வாகிகளை அச்சுறுத்தலாம்.

ஆனால் எங்கள் தளபதியையோ- ஏன் திமுகவில் உள்ள அடிமட்ட தொண்டனிடம் கூட உங்கள் ஜம்பம் பலிக்காது என்பதை புரிந்துகொள்ள இன்னும் குறைந்தது இருபது ஆண்டுகளாவது தமிழக அரசியல் பற்றி நீங்கள் “பாலபாடம்” கற்க வேண்டும்.

இன்றைய நிலையில் அதிமுகவிற்குள் யாரும் திரு டி.டி.வி. தினகரனை மதிப்பதில்லை. தொண்டர்களோ “பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டியைப் பார்ப்பது” போல் திரு டி.டி.வி. தினகரனைப் பார்த்து மிரண்டு ஓடுகிறார்கள். முதலமைச்சராகியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போன்றோர் உங்களிடம் தற்காலிகமாக “அடகு” வைக்கப்பட்டுள்ள அதிமுக தலைமையை நிரந்தரமாக மீட்பது எப்படி என்ற “ரகசிய உடன்பாட்டிற்கு” ஏற்கனவே வந்து விட்டார்கள்.

விரைவில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் செய்யாத துணைப் பொதுச் செயலாளர் பதவியும் பறிபோகப் போகிறது. போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலையும் வரப் போகிறது என்ற ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் “தளபதி பற்றி விமர்சித்து” தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள திரு.டி.டி.வி. தினகரன் முயலுகிறார். அது பகல் கனவு. பலிக்காது!” என்று கூறியுள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :