1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2017 (18:39 IST)

”சூழ்ச்சி செய்து கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கிறார்கள்” - சசிகலா எச்சரிக்கை

ஊடகங்கள் மூலமாகவும், மறைமுகமாகவும் சூழ்ச்சிகளை செய்து கழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.


 

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலமானார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து டிசம்பர் 31ஆம் தேதி வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக அதிமுக தலைமை அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். மேலும், சசிகலாவே தமிழக முதல்வராகவும் பதவியேற்க வேண்டுமென அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளையும் சந்தித்து பேச சசிகலா முடிவெடுத்தார். தொடர்ந்து, ஜனவரி 4ஆம் தேதி முதல், 9ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி, இன்று 2ஆவது நாளாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக நடத்தினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை அதிமுக தொடர்ந்து நிறைவேற்றிடும். நீங்கள் எப்போதும் போல் கழகப் பணியாற்றுங்கள். மக்களுக்கும், ஆட்சிக்கும் பாலமாக இருங்கள்.

கழகத்தின் வளர்ச்சியை பொருத்துக் கொள்ள முடியாத சிலர், ஊடகங்கள் மூலமாக எதிர்த்தும், மறைமுகமாகவும் சூழ்ச்சிகளை செய்து கழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கிறார்கள். அந்த சதியை முறியடிக்கும் வகையில் கழக நிர்வாகிகள் கட்சிக்காக மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.