வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (17:22 IST)

'அப்பொழுது தெரியும் உங்க வண்டவாளம்' - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், அவை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதுபோல இங்கும் நேரடி ஒளிபரப்பு செய்தால் உண்மை வண்டவாளத்திற்கு வரும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
தமிழக சட்டப்பேரவையில் உள்ள தனது அறைக்கு செல்வதற்காக சட்டசபை வளாகத்திற்கு வருகை தந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை அவைக் காவலர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்து 4-ம் எண் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினர்.
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், “நேற்றைய தினம் சபாநாயகர் அவர்கள் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை குண்டு கட்டாக அவையில் இருந்து வெளியேற்றியது மட்டுமல்லாமல், ஒரு வார காலம் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளக் கூடாது என்று ஒரு சர்வாதிகாரத் தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.
 
அதேபோல காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளே சென்று நேற்றைக்கு சபாநாயகர் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
 
அந்த கோரிக்கையை வழக்கம் போல சபாநாயகர் ஆணவத்தோடு, சர்வாதிகாரத்தோடு ”திரும்பப் பெற முடியாது”, என திட்டவட்டமாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், ”வேண்டுமென்றால் நீங்களும் வெளியே போங்கள்”, என அவருடைய தகுதிக்கு கீழிறங்கி எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து சொல்லி இருக்கிறார்.
 
அதனை கண்டிக்கின்ற வகையில், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், ”பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், பல மாநில சட்டமன்றங்களிலும் அவை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதுபோல இங்கும் நேரடி ஒளிபரப்பு செய்தால் உண்மை வண்டவாளத்திற்கு வரும்.
 
அவர்கள் தவறு செய்கிறார்களா அல்லது நாங்கள் தவறு செய்கிறோமா, நாங்கள் நியாயத்தை பேசுகிறோமா அல்லது அவர்கள் பேசுகிறார்களா என்பது நாட்டு மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவரும். அதனால் தான் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.