1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2014 (11:24 IST)

தொழிற்சங்க நிலம் விற்பனை விவகாரத்தில் தா.பாண்டியன் மீது சொந்த கட்சிப் பிரமுகர் வழக்குப்பதிவு

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் மீது திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் என்.மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
என்.மணி என்பவர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் விவரம் வருமாறு:–
 
1937 ஆம் ஆண்டு ‘சௌத் மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி சப்ளை கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு 1973–ல் தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணைக்கப்பட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட எஸ்.எம்.இ.டபிள்.யு என்ற தொழிற்சங்கத்தில் செயல்பட்டு வந்தனர்.
 
திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே இந்த சங்கத்திற்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.20 லட்சத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் விற்பனை செய்துள்ளார்.
 
விற்பனை பத்திரத்தில் எஸ்.எம்.இ. தொழிற்சங்கத்தின் தற்போதைய செயலர் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் என்றும் குறிப்பிட்டு பாண்டியன் கையெழுத்திட்டிருக்கிறார். அன்றைய தொழிற்சங்கத்தின் தொழிலாளர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டனர். எனவே சங்கத்தின் தற்போதைய செயலாளர் என்பது தவறான தகவல்.
 
மேலும் ரூ.3 கோடி சந்தை மதிப்புள்ள இடத்தை ரூ.20 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். எனவே விற்பனை ஒப்பந்த பத்திரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் அந்த இடத்தை மாவட்ட எ.ஐ.டி.யு.சி. அல்லது மின்வாரிய தொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமான இடமாக அறிவிக்க வேண்டும்.
 
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.