Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று மாலைக்குள் முடிவுக்கு வர உள்ள பஸ் ஸ்டிரைக்!

Last Modified வியாழன், 11 ஜனவரி 2018 (16:10 IST)
நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையான, பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றுள்ளதால் இன்று மாலைக்குள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
 
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8-வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை.
 
தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் நேற்று பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக 750 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
 
எனவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தைதை விட்டு விட்டு பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். தங்களின் சம்பள உயர்வான 2.57 சதவீதத்தை அரசு ஏற்கும் வரை போராட்டம் கைவிடப்படமாட்டாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
 
வருகிற 13-ஆம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குவதால், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் நாளை முதல் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
 
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சில நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. அதில், அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கேட்பதற்கும், அரசு கொடுத்துள்ளதற்குமான 0.13 மடங்கு வித்தியாசத்தை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
 
ஊதிய உயர்வு தொடர்பாக அந்த நடுவர் மூன்று மாத காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் விரைவில் பணிக்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் இதற்கான உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :