வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 31 டிசம்பர் 2014 (08:42 IST)

பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படும்வரை போராட்டம் தொடரும்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றிய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படும்வரை போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 
ஊதிய ஒப்பந்தம் மற்றும் பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 28ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது 4 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
 
இந்த போராட்டம் குறித்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று மாலை 5.50 மணியளவில், தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம், சென்னை போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் முன்னிலையில், வேலை நிறுத்த போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 
கூட்டம் முடிந்த பின்னர், அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் சின்னச்சாமி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. சார்பில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச ஆட்சேபனை இல்லை என்று கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.
 
தொ.மு.ச. கடிதத்தை எழுதி கொடுத்ததன் அடிப்படையில், இன்று காலை 10 மணிக்கு கோட்டையில் உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடைபெறும். அதில் சுமுகமான தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. தலைவர் அ.சவுந்திரராசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
 
அப்போது சண்முகம் கூறுகையில், “இந்தப் பேச்சுவார்த்தைக்கு வந்த அரசு பிரதிநிதிகள், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச ஆட்சேபனை இல்லை என தொ.மு.ச. கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்றனர். உடனடியாக தொ.மு.ச. சார்பில் கடிதம் எழுதி கொடுக்கப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து இன்று அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும்“ என்றார்.
 
பின்னர் அ.சவுந்திரராசன் எம்.எல்.ஏ. கூறுகையில், “இதுவரை நடைபெற்றவை, போராட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள். இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைதான், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் தொடக்கம். இந்த பேச்சுவார்த்தையின்போது, கைது செய்யப்பட்ட ஊழியர்களை விடுவிப்பது, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்துப் பேசப்படும்.
 
மேலும், அமைச்சருடனான பேச்சுவார்த்தை முடிவடைந்தபின், இரு தரப்பினரும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, இரு தரப்பிற்கும் சகஜமான நிலைப்பாடு வந்த பிறகு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் பேசி சுமுகமான தீர்வு எட்டப்படும். அதுவரை போராட்டம் தொடரும்” இவ்வாறு அவர் கூறினார்.
 
நேற்று போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.