1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (12:27 IST)

கபாலிக்கு வில்லனான டிராபிக் ராமசாமி : சென்னையில் பரபரப்பு

கபாலி பட போஸ்டர்களை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கிழித்து எறிந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியானது. இப்படம் வசூலில் பெரிய சாதனை படைத்து வருகிறது. 
 
இந்த படத்திற்காக சென்னையின் திரையரங்கங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் உள்ள ஒரு சினிமா திரையரங்கத்தில் கபாலி படத்தின் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
 
அந்த வழியாக செல்பவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அந்த பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தது. எனவே அவற்றை அகற்றும் படி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
 
எனவே வழக்கம்போல் களத்தில் இறங்கிய ராமசாமி, நேராக அந்த திரையரங்கத்திற்கு சென்று, அங்கிருந்த கபாலி பட பேனர்களை கிழிக்கத் தொடங்கினார். இதனைக் கண்டு அங்கிருந்த ரஜினி ரசிகர்கள் ஆவேசமடைந்து, அவருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து, அங்கு விரைந்த திருவான்மியூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த பிரமாண்ட பேனர்களை அகற்றி கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.