வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2015 (13:35 IST)

சுங்கச் சாவடிகளை அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வந்து முறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

அனைத்து சுங்கச் சாவடிகளையும் அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வந்து முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய சரக்குந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.
 
நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளுக்கு எதிராக சரக்குந்து உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்திருப்பது மிகவும் சரியானது. சுங்கச் சாவடிகள் சரக்குந்து உரிமையளர்களுக்கு மட்டு மின்றி நாடு முழுவதும் சாலைகளை பயன்படுத்தும் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்ட சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் அதிகாரம் அந்த நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டதால், அதை பயன்படுத்திக் கொண்டு அவை பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.
 
நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக்கட்டணம் மிக அதிகமாக இருப்பதுடன், ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு விதமான கட்டண வசூலிப்பு முறை கடைபிடிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
 
நெடுஞ்சாலை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டுவிட்டால், அதன் பின்னர் அந்த சாலையில் பராமரிப்புக்காக 40 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
 
ஆனால் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும், எந்த சாலையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளில் முதலீட்டை திரும்ப எடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
 
ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட சாலைகளில் கூட இன்றும் 100 விழுக்காடு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஆண்டுக்கொருமுறை 10 முதல் 15 விழுக்காடு வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த அணுகு முறை கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
4 வழி மற்றும் 6 வழி சாலைகள் அமைக்கப்பட்ட போது அதில் தடையின்றி வேகமாக பயணம் செய்ய முடிந்ததாலும், எரிபொருள் மிச்சமானதாலும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதற்காக சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கு தயாராக இருந்தனர்.
 
ஆனால் காலப்போக்கில் பெரும்பாலான சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் சுங்கக் கட்டணம் மட்டும் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. இதனால் ஒரு காலத்தில் வரமாக பார்க்கப்பட்ட சுங்கச் சாலைகளை இப்போது சாபமாக பார்க்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு மகிழுந்தில் செல்வதற்கு 1000 ரூபாய்க்கு மேல் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இது மிகமிக அதிகமாகும். அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயக்குவதற்கான காரணங்களில், அதன் மொத்த வருவாயில் கணிசமான பகுதியை சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டியிருப்பதும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
 
வாகனங்களை பதிவு செய்யும் போதே சாலை பயன்பாட்டுக்கான வரி ஒட்டு மொத்தமாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் ஒரு குறிப்பிட்ட தொகை சாலை பராமரிப்புக்காக ஒதுக்கப்படுகிறது.
 
அவ்வாறு இருக்கும் பொழுது தரமான சாலைகளில் தடையின்றி செல்வதற்கான வசதியை ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமையாகும். தரமான சாலைகளில் பயணம் செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது. ஆனால் இதற்கு மாறாக தனியார் மூலம் சாலைகளை அமைத்து அதற்கு மக்களிடம் கட்டணம் வசூலிப்பது இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்.
 
முதற்கட்டமாக அனைத்து சுங்கச் சாவடிகளையும் அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வந்து முறைப்படுத்த வேண்டும். சுங்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் கணக்குகளை அரசு தணிக்கை செய்ய வேண்டும்.
 
சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட பிறகு அச்சாலைகளில் பராமரிப்புக்காக 20 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.