வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (07:46 IST)

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம்

சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுங்கச்சாவடி மையங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தக்கோரி தமிழகம், புதுவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார்.

அதன்படி, விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மையத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட 410 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம், தொப்பூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கனல்கண்ணன் தலைமை வகித்தார்.

மாநில மகளிர் அணி தலைவர் ஜெயலட்சுமி பாலு, மாநில துணை பொதுச் செயலாளர் தவமணி, மாவட்டச் செயலாளர் முனிரத்தினம் உள்ளிட்ட 70 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல, புதுச்சேரி மாநிலத் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் மொரட்டாண்டி சுங்கச்சாவடிக்குச் சென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த ஆரோவில் காவல்துறையினர், சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட 100 க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 580 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.