வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2015 (05:49 IST)

மு.க.ஸ்டாலினின் மூன்றாவது கட்ட நமக்கு நாமே பயணம் சேலத்தில் தொடக்கம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மூன்றாவது கட்ட நமக்கு நாமே பயணம் சேலத்தில் தொடங்கியது.
 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மூன்றாவது கட்ட நமக்கு நாமே பயணம் சேலத்தில் தொடங்கியது. அப்போது,  வீரபாண்டி ஆறுமுகம் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தினார்.
 
இந்த பயணம் குறித்து மு.க.ஸ்டாலினின் முகநூல்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எவ்விதத்திலும் தொழில் செய்யமுடியாத சூழ்நிலையால், தாங்கமுடியாத துன்பத்துக்கு உள்ளாகி, வேறு வழி தெரியாமல் பலர் ஊரை விட்டு வெளியேறி, வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நான் சந்தித்த நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
 
கடந்த திமுக ஆட்சிகாலத்தில் நெசவாளர்களுக்கு 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர்கள், ஆனால் அதிமுக அரசு அமைந்த பிறகு கட்டாயப்படுத்தி பொறுத்தப்பட்ட மின் மீட்டர்களால் இருமடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு தேவையான கடனுதவிகள் பெறுவதிலும் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
அதேபோல லாரி உரிமையாளர்கள் கூறுகையில், சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் வரியை மறு சீரமைக்க வேண்டும் என்ற தங்களது நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என வலியுறுத்தினர்.
 
இதனையடுத்து நான் சந்தித்த பெண்கள் குழு அதிமுக அரசு மீதான அதிருப்தியை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தினர். இந்த ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா அம்மா மிக்சி, கிரைண்டர்களை கையோடு கொண்டு வந்திருந்த அந்த பெண்கள், அவற்றில் ஒன்று கூட உருப்படியாக வேலை செய்யவில்லை என குற்றம் சாட்டினர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா பொருட்களை 4-5 நாட்கள் கூட பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
 
இந்த விலையில்லா பொருட்களை வழங்குவதாக தேர்தலின்போது அறிவித்து அதனால் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு, வீட்டு உபயோகப் பொருட்கள் குறைந்தபட்ச தரத்திலாவது இருக்க வேண்டும் என்பது கூட தெரியாதா என்று கேள்வி எழுப்பிய அந்த பெண்கள், போதிய வேலை வாய்ப்பை அளித்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆட்சி தங்களுக்கு தேவையே தவிர, இதுபோன்ற தரமற்ற பொருட்களை கொடுக்கும் அரசு தேவையே இல்லை என்றும் குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ளார்.