1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2017 (10:27 IST)

ஆப்ரேஷன் கமல் ஆரம்பம்: தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் தொடர்பு விபரம் மாயம்!

ஆப்ரேஷன் கமல் ஆரம்பம்: தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் தொடர்பு விபரம் மாயம்!

நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழக அரசுக்கும் இடையே சமீப காலமாக மோதல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கமல் கூற அமைச்சர்கள் கமலை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.


 
 
சில அமைச்சர்கள் ஒருமையில் பேச சில ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டை வைக்க கூடாது என கூறினர். இதனையடுத்து அனைத்திற்கும் சேர்த்து வைத்து தனது டுவிட்டர் பதிவு மூலமாக பதிலடி கொடுத்த கமல் மக்களை தாங்கள் இந்த அரசின் ஊழலால் சந்தித்த இன்னல்களை விளக்கி அமைச்சர்களுக்கு புகாராக டிஜிட்டல் முறையில் அனுப்ப அறிவுறுத்தினார்.
 
மேலும் அதற்காக தமிழக அரசின் துறை சார்ந்த அமைச்சர்களின் முகவரி அடங்கிய தமிழக அரசின் இணையதள முகவரியை குறிப்பிட்டிருந்தார். லட்சக்கணக்கில் புகார்கள் வரும் என தான் நினைப்பதாகவும் அதில் கூறினார்.
 
இந்நிலையில் தற்போது கமல் குறிப்பிட்ட தமிழக அரசின் அமைச்சர்கள் விபரம் அடங்கிய அந்த இணையதளத்தில் இருந்து முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களின் தொடர்பு முகவரி, மின்னஞ்சல், தொலைப்பேசி எண்கள் என அனைத்தும் நீக்கப்பட்டு திடீரென மாயமாகி உள்ளது.
 
நடிகர் கமல் அறிவித்த பின்னர் இந்த முகவரிகள் மாயமாகி உள்ளதால் கமலுக்கு பயந்து தான் ஆளும் கட்சி அமைச்சர்களின் தொடர்பு முகவரிகளை இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளதா என பலரும் பேசி வருகின்றனர். ஆனால் தமிழக சட்டசபை  இணையதளத்தில் விபரங்கள் இன்னமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.