செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (12:30 IST)

உணர்வற்றுக் கிடந்தார் ஜெயலலிதா.. ஆளுநரின் அதிர்ச்சிக் கடிதம்; சூடுபிடிக்குமா விசாரணை ஆணையம்?

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவ் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் விசாரணை ஆணையத்தில் தற்பொழுது சமர்பிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 சிகிச்சைப் பெற்று, 2016 டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். 
 
ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியதால், தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
 
மருத்துவர்கள், அமைச்சர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது.
 
ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணைக் கமிஷனின் காலக்கெடு 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் 4 மாதம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர்ராவ் தரப்பிலிருந்து 2 கடிதங்கள் விசாரணை ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் 1.10.2016 அன்று ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது அவரை நேரில் பார்த்ததாகவும் அப்போது அவர் உணர்வற்ற நிலையில் இருந்ததாகவும் 6.10.2016 அன்று வித்யாசாகர்ராவ் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்தோடு மருத்துவனை நிர்வாகத்திடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டு வித்யாசாகர் ராவ் கடிதம் எழுதியிருக்கிறார்.
 
இந்த இரு கடிதங்களும் தற்பொழுது விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுனரின் இந்த கடிதத்தால் தீபாவளி முடிந்து தொடங்கவிருக்கும் விசாரணை ஆணையம்  சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.