செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 6 ஜூலை 2015 (18:04 IST)

முல்லைப் பெரியாறு அணைக்கு புலிகளால் ஆபத்து என்று சொல்லவே இல்லை: தமிழக அரசு விளக்கம்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விடுதலைப் புலிகள் குறித்த மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள குறிப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில் உச்ச நீதிமன்றத்தில் இதற்கான மனு உடனடியாக தாக்கல் செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் அச்சுறுத்தல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த வாரம் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும், தமிழக விவசாயிகளின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றவர் முதல்வர் ஜெயலலிதா.
 
17.11.2014 அன்று கேரள சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் முன்னறிவிப்பு ஏதுமின்றி தமிழக அலுவலர்களை புறம் தள்ளிவிட்டு முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றார். இது குறித்து கேரள காவலர்களுக்கு தமிழ்நாடு பொறியாளர்கள் தெரிவித்த போதிலும், அவர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலவில்லை.
 
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு 18.11.2014 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக அணையைப் பாதுகாக்கும் பொருட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்பி வைக்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, 19.11.2014 அன்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஓர் இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது.
 
இந்த மனுவில் அணை மற்றும் அதனைச் சார்ந்த கட்டுமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினை அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் 3.7.2015 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உச்ச நீதிமன்றம் பதிவு செய்துகொள்ள வேண்டி, கூடுதல் ஆணை உறுதி ஆவணம் ஒன்றை 1.7.2015 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
 
இந்தக் கூடுதல் ஆணை உறுதி ஆவணத்தில் 12.5.2015 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்தக் கூடுதல் ஆணை உறுதி ஆவணத்தில் தமிழ்நாடு அரசால் 19.11.2014 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு 17.4.2015 அன்று கேரள அரசால் தாக்கல் செய்யப்பட்ட எதிர் உறுதி ஆவணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 
அந்த மனுவில் என்றுதான் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது, 12.5.2015 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 18 வரை முல்லைப் பெரியாறு அணை மற்றும் பெரியாறு நீர்மின் நிலையம் ஆகியவற்றில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் படி கேரள காவல் துறைக்கு பதிலாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்கப்படவேண்டும்.
 
முல்லைப் பெரியாறு அணை மற்றும் இதர முக்கிய நிர்மாணங்களின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போன்ற தொழிலியல் பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற மத்திய நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையை உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்றும், மத்திய அரசு உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு படையை முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க தமிழக தலைமைச் செயலாளர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்து தலைமைச் செயலாளரின் கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது என்றும்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்ததுபோல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை. எனினும், ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வந்தவுடன், முதல்வர் இது பற்றி என்னிடமும், அரசு உயரதிகாரிகளிடமும் விவாதித்தார்.
 
அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையின் நகலை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்பது முதல்வரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. அந்த அறிக்கையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு முல்லைப் பெரியாறு அணை மற்றும் முக்கிய நிர்மாணங்கள் ஆகியவற்றுக்கு நக்சலைட்டுகள் போன்ற அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவித்துள்ளதோடு பத்தி 4.4-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று திரள முயற்சித்துள்ளனர் என்றும் அவர்கள் இறுதிப் போரில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யாததால், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
 
மேலும், முக்கிய நிர்மாணங்களுக்கு இவர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பாக எதுவும் இல்லை என்றாலும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதிலும் கூட விடுதலைப் புலிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் விளைவிப்பார்கள் என்று குறிப்பிட்டு மத்திய நுண்ணறிவுப் பிரிவு தெரிவிக்கவில்லை.
 
இருப்பினும், இது குறித்து தேவையற்ற விவாதமும், மனச் கசப்பும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் மீது வீண் பழியும் சுமத்தப்படுவதால், தமிழக அரசு, ஒரு கூடுதல் மனுவினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
 
இந்த கூடுதல் மனுவில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அச்சுறுத்தல் பற்றி அதனுடைய அறிக்கையில் பத்தி 4-ல் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில், 4.1 முதல் 4.3 மற்றும், 4.5 முதல் 4.8 வரையிலான மதிப்பீடுகள் மட்டும் தமிழக அரசுக்கு ஏற்புடையது என்றும், விடுதலைப் புலிகள் குறித்து பத்தி 4.4-ல் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் குறிப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற விவரத்தை இந்தக் கூடுதல் மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்கள். அவரது அறிவுரையின்படி, உச்ச நீதிமன்றத்தில் இதற்கான மனு உடனடியாக தாக்கல் செய்யப்படும்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.