வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (15:50 IST)

மீனவர்களின் படகுகள் சிறைபிடிப்பு விவகாரம்: சுப்பிரமணியசாமி மீது வழக்கு

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை இராணுவம் சிறைபிடித்த விவகாரம் தொடர்பாக சுப்பிரமணியசாமி மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை இராணுவம் கைது செய்வதும், அவர்களது படகுகளை சிறைபிடிப்பதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. அப்போது, ''நான் தான் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யுங்கள். மீனவர்களை விட்டுவிடுங்கள் என இலங்கை அரசுக்கு கூறினேன்'' என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இது தொடர்பாக அவர் மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இது குறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியப்பன், ராமலிங்கம், தமிழ் தேசிய பேரவையை சேர்ந்த வெங்கடாஜலபதி, மணிமாறன், செங்கொடி எழுச்சி பேரவை செய்யதலி, அசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை ராணுவம் நான் சொல்லித்தான் பறிமுதல் செய்துள்ளனர் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு அவர்தான் காரணம் என உறுதியாகி இருக்கிறது.
 
எனவே, 294 பி, 500, 124ஏ ஆகிய சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று நெல்லை ஜே.எம்.1வது நீதிமன்றத்தில் நாங்கள் 6 பேரும் கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளோம்'' என்றனர்.
 
இந்த மனு மீதான விசாரணை வருகிற 24 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.