1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 25 மார்ச் 2015 (16:01 IST)

தமிழக பட்ஜெட் மக்களை கடனாளியாக்கும் காகித அறிக்கை: ராமதாஸ் கருத்து

2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு - செலவு காகித அறிக்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் 2015-16ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையைக் கூட ஜெயலலிதாவின் புகழ்பாடும் அறிக்கையாக மாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். ‘அம்மா’ இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததாலோ என்னவோ, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படவில்லை.
 
தமிழகத்தை கடுமையாக பாதிக்கக்கூடிய விவசாயம், தொழில் உற்பத்தி, மின்வெட்டு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. தமிழகத்தில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். தமிழக அரசுத் துறைகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
 
இத்தகைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம் போல் இரண்டு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. புதிய மின்திட்டங்களையும் அறிவிக்காமல், அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களையும் செயல்படுத்தாமல் மின்வெட்டைப் போக்கப் போவதாக ‘வெறும் கையால் முழம் போடும்’ வேலையைத் தான் அரசு செய்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காக லோக் அயுக்தாவை ஏற்படுத்தவும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
 
ஒரு மாநிலம் வளர்ச்சியடைய விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய 3 துறைகளும் செழிக்க வேண்டியது அவசியம் ஆகும். சுகாதாரத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2 % அதாவது சுமார் ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் ரூ.8245 கோடி (0.8%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 62,000 கோடி ஒதுக்குவதற்கு பதிலாக ரூ.20,936 கோடி (2.04%) மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதன்மைத் துறையான வேளாண்துறைக்கு ரூ.6613 கோடி (0.65%) மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
மேலும் அடுத்த பக்கம்..

மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான 3 துறைகளுக்கும் மொத்தமாக ரூ.35,794 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதைவிட 70 % அதிகமாக இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கு ரூ.59,185 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழக அரசு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறதா.... அல்லது இலவசங்களுக்கு முக்கியத்துவம் தருகிறதா? என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
 
தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 5 விழுக்காடு அளவுக்குக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக தமிழக அரசின் நிதிநிலை மிக மோசமான நிலையில் இருப்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.
 
2014-15ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூ. 91,835 கோடியாக இருக்க வேண்டும்; ஆனால், இது 85,772 கோடியாக குறைந்து விட்டது. வணிக வரி வருவாய் ரூ.68,724 கோடி என்ற இலக்கை எட்ட முடியாமல் ரூ.65 ஆயிரம் கோடிக்கும் கீழ் குறைந்து விட்டது. முத்திரைத் தாள் வருவாய் ரூ.10,470 கோடி என்ற இலக்கை விட குறைவாக ரூ.9,330 கோடி என்ற அளவில் தான் உள்ளது. மோட்டார் வாகன வரி வருவாயும் ரூ.8083 கோடி என்ற இலக்கில் பாதியாக, அதாவது ரூ.4279 கோடியாக குறைந்து விட்டது.
 
அதேநேரத்தில் அரசின் செலவுகள் மட்டும் கணிக்கப் பட்டதை விட அதிகமாக ரூ. 1.37 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. தமிழக அரசின் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் வளர்ச்சியை எட்டியுள்ள ஒரே விஷயம் மது விற்பனைதான். மற்ற அனைத்து வரிகளும் இலக்கை எட்ட முடியாத நிலையில் ஆயத்தீர்வை வருவாய் மட்டும் ரூ.6,483 கோடி என்ற இலக்கைத் தாண்டியிருக்கிறது.
 
அதுமட்டுமின்றி, மதுவிற்பனை வருவாயும் கிட்டத்தட்ட இலக்கைத் தொட்டு ரூ.26,188 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. மேலும் 2015 -16ஆம் ஆண்டில் ரூ.29,627 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பது தான் அதிமுக அரசின் சாதனையாகும்.
 
2015 -16ஆம் ஆண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.28,578 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ரூ.31,829 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதை சமாளிக்க ரூ.30,446 கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்திருப்பதால் நடப்பாண்டின் இறுதியில் தமிழக அரசின் நேரடி கடன் சுமை ரூ.2,11,483 கோடியாகவும், மொத்த கடன் சுமை ரூ.4,12,500 கோடியாகவும் இருக்கும். இது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததை விட ரூ.5,000 கோடி அதிகம் ஆகும்.
 
அரசின் நேரடிக் கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.17,856 கோடியை தமிழக அரசு செலுத்த விருக்கிறது. தமிழக அரசு வாங்கிக் குவிக்கும் கடன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,053 கடன் சுமத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் கடன் சுமை ரூ. ரூ.2.85 லட்சமாக இருக்கும். நம்பி வாக்களித்த மக்களுக்கு அதிமுக அரசு செய்த கைம்மாறு மாநிலத்தையும், மக்களையும் மீளமுடியாத கடன் வெள்ளத்தில் மூழ்கடித்தது தான்.
 
மக்களுக்காக சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக கொசுவலை, எல்.இ.டி பல்பு உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறார். இது மொத்த பட்ஜெட் மதிப்பில் 0.40 விழுக்காட்டிற்கும் குறைவாகும். மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு உதவாத, தொழில் வளர்ச்சியை பெருக்காத, வேலைவாய்ப்பை உருவாக்காத, பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளக்கூடிய, தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு - செலவு காகித அறிக்கை ஆகும்.'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.