1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2015 (00:14 IST)

தலைக்கவசம் அணிவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் கருத்து

தமிழகத்தில், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணிவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமாகா இளைஞரணி செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில், அதன் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பல லட்சம் தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்னை ஆகும். அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை  நிறுத்த மத்திய அரசு முன் வர வேண்டும். அணையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது.
 
மத்திய அரசு, நகர மேம்பாட்டு திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் 65 சதவீத மக்கள் கிராமங்களில்தான் வாழ்கின்றனர். எனவே நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மேம்பாட்டுக்கும் மத்திய அரசு தேவையான திட்டங்கள் தயார் செய்து வழங்க முன்வரவேண்டும்.
 
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவது குறித்து பொது மக்களிடையே இன்னும் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொது மக்களே விரும்பி தலைக்கவசம் அணியும் சூழ் நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தற்போது தலைக்கவத்திற்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. மேலும், தலைக்கவசம் தட்டுப்பாடு காரணமாகவும் பலர் தலைக்கவசம் வாங்க இயலவில்லை. எனவே, தலைக்கவசம் அணிவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.