வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : சனி, 23 ஆகஸ்ட் 2014 (13:30 IST)

மதுரையில் ஜெயலலிதா சொன்ன மூன்று குட்டிக் கதைகள்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தியதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சார்பில் 22.8.2014 அன்று மதுரையில் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஜெயலலிதா, தமது ஏற்புரையில் மூன்று குட்டிக் கதைகளைக் கூறினார். அவை இங்கே:-
 
குட்டிக் கதை 1
 
இந்த வெற்றி வேளாண் பெருங்குடி மக்களாகிய உங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டுமென்றால், அதற்குரிய உறுதியும் விடாமுயற்சியும் தேவை. 
 
ஒரு குருவும் அவரது சீடர்களும் கடலோரம் அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியினைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். 
 
ஒரு சீடனைப் பார்த்து, “உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்டார் குரு. 
 
அதற்கு அந்தச் சீடன், “திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளின் விடாமுயற்சி தெரிகிறது” என்றான். 
 
இதே கேள்வியை மற்றொரு சீடனிடம் கேட்டார் குரு.
 
அதற்கு அந்தச் சீடன், “துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் துன்பங்கள் சிதறிப் போகும்” என்றான். 
 
இவற்றைக் கேட்ட குரு “சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு” என்று சொன்னார். 
 
இந்த கதையில் வருவது போல், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில், எனது தலைமையிலான அரசு அலைகளாயும், கரையாயும் இருந்து செயல்பட்டதால் தான் இன்று நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். 
அடுத்தது

குட்டிக் கதை 2
 
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். அதுவும் சிதறாத மனமாக இருக்க வேண்டும். அப்போது தான் அது ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து, அதிலிருந்து பலம் பிறக்கும். அந்தப் பலத்தின் மூலம் தான் நாம் எதையும் சாதிக்க முடியும். ஆனால், திரு. கருணாநிதியின் மனமோ சிதறிய மனம். 
 
ஒரு மன்னர், யானை மீது நாட்டை சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். 
 
ஒவ்வொரு முறையும் மன்னர் ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்குப் போகும் போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேலே நடக்க முடியாமல் நின்று விடுவதும் தொடர்ந்து நடந்து வந்தது. 
 
அந்த இளைஞன் குறித்து மன்னர் விசாரித்த போது, அந்த இளைஞன் சிறு சிறு வேலைகளைச் செய்து, கிடைப்பதை உண்டு கவலை ஏதுமின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 
 
பலம் வாய்ந்த யானையை, ஒரு சாதாரண இளைஞன் எப்படி இழுத்து நிறுத்துகிறான் என்று மன்னர் அமைச்சரிடம் வினவினார். 
 
அதற்கு அமைச்சர், இதற்கு காரணம் அவனது மன வலிமை என்றார். 
 
அவனது மன வலிமையை எப்படி மாற்றுவது என மன்னர் ஆலோசனை நடத்தினார். 
 
அப்போது அமைச்சர், “தினமும் அவனுக்கு ஒரு தங்கக் காசு சம்பளம் கொடுங்கள். மாலையில் அருகில் உள்ள திருக்கோயிலில் விளக்கு ஏற்றுவது உன் பணி என்றும், அதற்கான சம்பளமே இந்தத் தங்கக் காசு என்றும் சொல்லுங்கள்” என்று கூறினார். 
 
அந்த இளைஞனுக்கு அவ்வாறே விளக்கு ஏற்றும் பணி வழங்கப்பட்டது. 
 
தினமும் தங்கக் காசு சம்பளம் பெற்றவுடன், எவ்வளவு தங்கக் காசுகள் தன்னிடம் சேர்ந்து இருக்கின்றன என்றும், 100 காசுகள் சேர்க்க இன்னும் எத்தனை நாட்கள் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் கணக்கிட்டுக் கொண்டிருந்தான். 
 
ஒரு மாதம் கழித்து அவ்வழியாக மன்னர், யானை மீது சென்றார். அப்போதும் அந்த இளைஞன் யானை வாலைப் பிடித்து இழுத்தான். ஆனால் யானையை நிறுத்த முடியவில்லை. வாலைப் பிடித்தபடியே யானையின் இழுப்பில் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான். 
 
இது எவ்வாறு நடந்தது என்று மன்னர் வினவினார். 
 
அதற்கு அமைச்சர், “காசைச் சேர்க்க ஆரம்பித்த உடன், அவனது கவனம் சிதறிவிட்டது. அவனுடைய மனம் பணத்தின் பக்கம் போய்விட்டது. எனவே, அவனது பலம் போய்விட்டது” என்றார். 
 
இந்தக் கதையில் வருபவரைப் போல், திரு. கருணாநிதியின் மனம் ஸ்பெக்ட்ரம் பக்கம் இருந்ததால், தமிழர் நலன் பற்றி திரு. கருணாநிதி கவலை கொள்ளவில்லை. இதன் விளைவாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது என்ற நிலை மாறி, புதிய அணை என்ற கோரிக்கையை கேரளா அரசாங்கம் வைத்து, அதற்கான ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசும் அனுமதி அளித்தது. 
 
அடுத்தது

குட்டிக் கதை 3
 
ஆட்சியில் அமர வைத்த தமிழக மக்களுக்கு துன்பத்தையே கொடுத்த ஆட்சி முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. தமக்கு வாழ்வளித்தவர்கள் தமிழர்கள் என்பதை முற்றிலும் மறந்துவிட்டு, தன் குடும்ப நலத்திற்காகத் தமிழினம் அழிய உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், தமிழர்களின் உரிமைப் பிரச்சனைகளிலும் தட்டிக் கழிக்கும் போக்கையே கடைபிடித்து வந்தார் திரு. மு. கருணாநிதி. 
 
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பது என்ற பழமொழிக்கேற்ப திரு. கருணாநிதியின் செயல்பாடு அமைந்திருந்தது. 
 
ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள், அந்த ஏழையின் முன் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். 
 
அதற்கு, “பணம், செல்வம், தங்கம், வைரம்” என்று ஆசையோடு கூறினான் அந்த ஏழை. 
 
உடனே, கடவுள் தனது வலது கை சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமாக மாறியது.
 
ஆனால் ஏழை எதுவும் பேசாமல் நின்றுகொண்டு இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேஜை தங்கமானது. 
 
அப்போதும் அந்த ஏழைக்குத் திருப்தி ஏற்படவில்லை. 
 
உடனே, கடவுள் அந்த அறையில் இருந்த அத்தனை பொருட்களையும் வேக வேகமாகத் தங்கமாக்கினார். 
 
அப்போதும் அந்த ஏழை சிரிக்கவில்லை. 
 
சோர்ந்து போன கடவுள், “இன்னும் உனக்கு என்ன தான் வரம் வேண்டும்?” என்று கேட்டார். 
 
அதற்கு அந்த ஏழை, “எனக்கு அந்த விரல் வேண்டும்” என்றான். 
 
அந்த ஏழையின் பேச்சைக் கேட்டதும், கடவுள் மயங்கி விழுந்துவிட்டார். 
 
இந்தக் கதையில் வருவதைப் போல், வாழ்வளித்த தமிழர்களை அழிக்க நினைத்தவர் திரு. கருணாநிதி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். 
 
இவ்வாறு ஜெயலலிதா உரையாற்றினார்.