வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (15:01 IST)

மாணவியுடன் பேசிய போது செல்போனில் படம் எடுத்து பேராசிரியரை பணம் கேட்டு மிரட்டிய காவலர்கள்

செல்போனில் படம் எடுத்து பேராசிரியரை மிரட்டிய ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாத். பரமக்குடி தாலுகா வேந்தோணி காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த ரேமன் குழந்தைவேல். இவர்கள் 2 பேரும் ராமநாதபுரம் ஆயுதப்படையில் காவலர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாதுகாப்பு பணிக்காக ராமநாதபுரம் வந்திருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு இவர்கள் 2 பேரும் டிரைவர்களாக பணியாற்றினர்.
 
அப்போது அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தங்கியிருந்தனர். அங்கு இருந்த பேராசிரியர் ஒருவர் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்ததை அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அந்த படத்தினை இணையதளத்தில் தவறான முறையில் வெளியிடுவோம் என்று கூறி பேராசிரியரை மிரட்டி பணம் கேட்டார்களாம்.
 
இதுகுறித்து அந்த பேராசிரியர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மயில்வாகனனிடம் புகார் செய்தார். அதனை தொடர்ந்து அந்த 2 காவலர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே அவர்கள் 2 பேரும் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது துறைவாரியான விசாரணை நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார்.