1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 மே 2016 (15:38 IST)

ஜெயலலிதாவுக்கு இது ஒரு நல்ல தொடக்கம் - சொல்கிறார் கி.வீரமணி

ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளது ஒரு நல்ல தொடக்கம் ஆகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பதவி ஏற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இது ஒரு நல்ல தொடக்கம் ஆகும். பொதுவான நடுநிலையாளர்கள், மக்களாட்சியின் மாண்பின் சிறப்பை உணர்ந்தவர்கள் அனைவரும் மகிழத்தக்கதோர் அறிகுறி ஆகும்.
 
எதிர்க்கட்சியாக மிக பலத்துடன் பொறுப்பேற்கும் திமுக தலைவர் கலைஞரும், எதிர்க்கட்சி  தலை வராகத் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவருமான  மு.க. ஸ்டாலினும், சட்டமன்றத்தில் ஆக்க ரீதியான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, ஜனநாயக பண்புகளை காப்பாற்றுவோம் என்று அறிவித்திருப்பது மிக நல்ல அறிகுறி ஆகும்.
 
சட்டமன்ற நடவடிக்கைகளிலும், ஆட்சியை நடத்துவதிலும், அதேபோல் உள்ளேயும், வெளியேயும் தரம் குறையாத அரசியல் விமர்சனங்களாலும், தமிழ்நாட்டின் பெருமையை அனைவரும் உயர்த்த வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.