கூவத்தூரில் தங்கியதால் தாயின் மரணத்திற்கு கூட போகாத எம்.எல்.ஏ..


Murugan| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (17:17 IST)
சசிகலா தரப்பால் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்ட, அதிமுக எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனது தாயின் மரணத்திற்கு கூட சொல்லாமல் இருந்தது, அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே  ரிசார்ட்டில் கடந்த 8ம் தேதி தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களை கண்காணிக்க, மன்னார்குடியிலிருந்து குண்டர்கள் பலர் அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டனர். அவர்களை மீறி செய்தியாளர்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை. 
 
அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் என பல்வேறு தரப்பினர் புகார் கூறினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், எங்களை யாரும் சிறை வைக்கவில்லை. நாங்கள் இங்கே சுதந்திரமாக இருக்கிறோம். இங்கே எங்களுக்கு எல்லா வசதியும் கிடைக்கிறது என சில எம்.எல்.ஏக்கள் மட்டும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். மற்ற எம்.எல்.ஏக்களின் நிலைமை குறித்து மர்மமே நீடித்து வந்தது.
 
இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் கே.என். விஜயகுமாரும் ஒருவர். அவரின் தாய் அங்காத்தா(80). திருப்பூர் அருகே உள்ள வெங்கமேட்டில் வசித்து வந்த அவர், சமீபத்தில் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இதுகுறித்து, விஜயகுமாரின் உறவினர்கள், செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போது, அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இரவில் எப்படியாவது வந்துவிடுவார் என காத்திருந்தனர். ஆனால் காலை வரை அவர் வரவில்லை. எனவே, விஜயகுமாரின் சகோதரர்கள் இறுதி சடங்குகளை செய்தனர். அதன் பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
 
அரசியல் நோக்கத்திற்காக, தாயின் மரணத்திற்கு கூட எம்.எல்.ஏ. விஜயகுமார் செல்லாதது, அவரது உறவினர்கள் மட்டுமின்றி, அவரின் தொகுதி மக்களிடையையேயும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது..

webdunia

இதில் மேலும் படிக்கவும் :