வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (19:25 IST)

திமுக-பாமக தலைவர்கள் சந்திப்பு: திருமாவளவன் கருத்து

தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் வசிக்கும் மழைவாழ் மக்கள் மீது பொய் வழக்குகள் போடும் வனத்துறை மற்றும் காவல்துறையினரைக் கண்டித்தும், தமிழகத்தை சேர்ந்த செட்டிப்பட்டி பழனி என்பவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையை கண்டித்தும் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
 
காவல்துறைக்கு என்றுமே வல்லவர்களோடு மோதி பழக்கம் இல்லை. வீரப்பனை எட்டப்பர்களை வைத்து மோரில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டனர். வீரப்பன் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அவனுடன் நேருக்கு நேர் இவர்களால் மோத முடியவில்லை. ஆனால் இப்போது எல்லை பகுதியில் சுள்ளி பொறுக்க செல்லும் அப்பாவி பெண்கள், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை வனத்துறை மற்றும் காவல்துறையினர் சித்ரவதை செய்கிறார்கள்.
 
தங்களின் சுயலாபத்திற்காக வீரப்பன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக சரவணன் என்பவனுக்கு குட்டி வீரப்பன் என்று கர்நாடக காவல்துறை பெயர் சூட்டி இருக்கிறது. ஒகேனக்கல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு பட்டா வழங்க அந்த மாநில அரசு மறுக்கிறது. இதில் மோடி அரசு தலையிட வேண்டும். செட்டிப்பட்டி பழனி கொலை வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
 
கூட்டணி பற்றி எனக்கு கவலை இல்லை. கூட்டணி சேர்ந்தோ, தனித்தோ தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் சென்றால் தான் சாதனையாளனா?. மக்கள் மன்றத்தில் தந்தை பெரியாரை போன்று சமூக போராளியாக இருப்பேன். தேர்தல் வெற்றி நமக்கு லட்சியம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புதான் என் லட்சியம். ஆனாலும் தேர்தல் களத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் பின்வாங்காது.
 
முழு பரிட்சைக்கு (சட்டமன்ற தேர்தலுக்கு) இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது. இப்போதே படிக்க (கூட்டணி) தொடங்கி இருக்கிறார்கள். தோல்வி பயம் உள்ளவர்கள்தான் இப்போதே படிப்பார்கள். என்னை பொறுத்தமட்டில் தேர்வுக்கு முந்தையநாள் படிப்பேன். தேர்விலும் வெற்றி பெற்றுவிடுவேன் என்று திருமாவளவன் கூறினார்.
 
முன்னதாக கூட்டணி பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘திமுக கூட்டணியில் இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆயுட்கால ஒப்பந்தம் போடவில்லை. தேர்தல் நேரத்தில் அந்தந்த கட்சி தலைவர்கள் விருப்பப்படி எடுக்கும் முடிவுகளை பொறுத்தது கூட்டணி. திமுக கூட்டணியில் பாமக இணையுமா என்பது குறித்து தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும் தலைவர்களின் விருப்பங்கள் நிறைவேற எனது வாழ்த்துக்கள்’ என்றார்.