செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (15:34 IST)

மதமாற்ற தடைச்சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - திருமாவளவன்

மதமாற்ற தடைச்சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: உத்தரப்பிரதேசம், குஜராத், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏழை, எளிய அப்பாவி கிறித்தவர்களையும் இசுலாமியர்களையும் அவர்களின் வறுமை நிலையைப் பயன்படுத்தி, ஆசை காட்டி மீண்டும் இந்துக்களாக்கும் நடவடிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இவர்களை கட்டுப்படுத்தும் வலிமையோ அல்லது  விருப்பமோ இந்திய அரசுக்கு, குறிப்பாக நரேந்திர மோடிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 
 
இந்நிலையில், பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வெங்கையா நாயுடு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் தயாராக இருக்கிறது என்றும், அதை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஆதரவு  அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். 
 
பாஜவும், சங்பரிவார் அமைப்புகளும் கூட்டுச் சேர்ந்து கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வருவதற்காகவே நாடு முழுவதும் இத்தகைய பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. இந்திய ஆட்சியாளர்களின் இத்தகைய போக்கை விடுதலை சிறுத்தைகள்  மிக வன்மையாகக் கண்டிக்கிறது. 
 
கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே, கட்டாய மீள் மதமாற்ற நடவடிக்கைகளையும், அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தை நிறைவேற்றவிடாமலும் தடுத்திட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.