1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (19:46 IST)

கூட்டணி தேர்தலோடு முடிந்துவிடாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்குவேண்டும் - திருமாவளவன்

தேர்தல் கூட்டணி தேர்தலோடு முடிந்துவிடாமல், ஆட்சி அதிகாரத்திலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்குவேண்டும் என திருமாவளவன் அறிவித்தார்.
 
மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் படுகொலை செய்யப்பட்டதன் நினைவுநாள் கூட்டம் விடுதலைக் களத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 7 பேர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய திருமாவளவன், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆடைகளை வழங்கினார்.
 
இதையடுத்து நடைபெற்ற வீரவணக்கநாள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 
தமிழகத்தில் பதினைந்து ஆண்டுகளாக ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியால் கொண்டுவரப்பட்ட பஞ்சாத்துராஜ், நகர்பாலிகா சட்டம் மூலம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதுதான் தலித்துகளுக்கென ஊராட்சித் தலைவர் பதவிகளை ஒதுக்கினார்கள்.
 
தமிழகத்தில் 2500 ஊராட்சிகளில் மதுரை மாவட்டத்தில் மேலவளவு உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் மட்டுமே ஆதிக்க சக்திகள் தாழ்த்தப்பட்டோர் ஊராட்சித் தலைவராக வரஎதிர்ப்புத் தெரிவித்தனர். மேலவளவு முருகேசன் தலை துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டபோதும் அரசியல் உரிமையை நிலைநாட்டும் லட்சியத்தில் தன் உயிரைவிடவும் துணிந்து தேர்தலில் போட்டியிட்டார். ஆதிக்க சக்திகள் அவர் தலையை துண்டித்து 7 பேரையும் கொலைசெய்தது.
 
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் மட்டும் கூட்டணி வைத்துக்கொண்டு, தேர்தலுக்குப்பின் ஒதுங்கிவிடும் நிலையை மாற்றிட முடிவெடுத்துள்ளது. முருகேசன் லட்சியத்தின்படியே 2016 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்களிப்பவர்களுடனே கூட்டணி என முடிவெடுத்துள்ளது.
 
கேரளம், பீகார், ஒரிசா, மேற்குவங்கம், மஹாராஷ்டிரத்திலும் ஏன் மத்தியிலும் கூட்டணி ஆட்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், தமிழகத்திலும் ஏன் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது. தாழ்த்தப்பட்டோருக்கான சமூகநீதியை நிலைநாட்டப்படுவதாகக் கூறுபவர்கள் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்கவேண்டும்.
 
நாட்டில் வீடு, நிலம், நகை, பணம் எல்லாம் சொத்துக்களாக மக்களால் கருதப்படுகிறது. அதேபோன்றுதன் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு என்பதும் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு சொத்துதான். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கணிசமான வாக்குவங்கியைகொண்டுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். கூட்டணி ஆட்சியை ஏற்பவர்களுடன்தான் இனி கூட்டணி என்றார்.