வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (17:06 IST)

பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

வரும் கல்வி ஆண்டு முதல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவில், இளைய சமுதாயம் மிகவும் சீரழிந்து வருவதாகவும், அவர்களை நல் வழிப்படுத்த, திருக்குறளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும், தற்போது மனப்பாட பகுதியாக உள்ள திருக்குறளை முழு பாடத்திட்டமாக மாற்றவும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் இளைய சமுதாயத்தின் சீரழிவை தடுக்க, திருக்குறளில் இன்பத்துப் பாடலை தவிர, மற்ற எல்லாப் பகுதியையும் கட்டாய தனிப்பாடமாக கற்பிக்க உத்தரவிட்டார்.
 
வரும் கல்வி ஆண்டு முதல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப்பாடமாக அமல்படுத்த தமிழக அரசிற்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் உத்தரவிட்டார். மேலும், திருக்குறளை மாணவர்கள், புரிதலோடு கற்றுக் கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.