வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (18:39 IST)

தேமுதிக பிரசாரத்தின்போது வேண்டுமென்றே மின்வெட்டு - பிரேமலதா குற்றச்சாட்டு

தேமுதிக பிரசாரம் நடைபெறும் இடத்தில் வேண்டுமென்றே மின்வெட்டு செய்கின்றனர். இது அநாகரீகமான செயல் என்று தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
கோவையில் வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், ’’கடந்த 5 ஆண்டுகளில் அதிக டாஸ்மாக் கடைகளை திறந்தது தான் ஜெயலலிதாவின் சாதனை. மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கினால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என ஜெயலலிதா கூறி வருகிறார்.
 
அதுபோன்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
கருணாநிதி குடும்பமும், திமுகவினரும், ஜெயலலிதா, சசிகலாவும் தான் மதுபான ஆலைகளை நடத்தி வருகிறார்கள். இந்த 2 பேரும் இன்னும் 100 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தமாட்டார்கள்.
 
எங்கள் கூட்டணியில் உள்ள 6 கட்சி தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. பலர் இந்த கூட்டணியை உடைக்க பார்த்தார்கள். இந்த தேர்தலில் இளைஞர்கள், மாணவர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
 
தேமுதிக பிரசாரம் நடைபெறும் இடத்தில் வேண்டுமென்றே மின்வெட்டு செய்கின்றனர். இது அநாகரீகமான செயல்.
 
தேமுதிகவை மக்கள் ஆதரித்து ஆட்சியமைந்தால், வீடு தோறும் ரேஷன் பொருட்கள் வந்துசேரும். நதிகள் இணைக்கப்படும். அரசுத்துறைகளில் ஊழல் இல்லாமலும், லஞ்சம் இல்லாமலும் செய்வோம்” என்று கூறியுள்ளார்.