ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (10:53 IST)

தனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை.. அதிமுகவை மீட்பதே குறிக்கோள்! – ஓ.பன்னீர்செல்வம் உறுதி!

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் தனக்கு துளி கூட இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமியின் கோரப்பிடியில் இருந்து அதிமுகவை கைப்பற்றி எம்ஜிஆர் மற்றும் அம்மா ஆன்மாக்களிடம் ஒப்படைப்பதற்காகவே போராடி வருவதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்


 
கோவை அடுத்த சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

முன்னதாக மண்டபத்திற்கு வந்த ஓ பி எஸ் க்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர்  கூட்டத்தில் பங்கேற்ற அபிநயா - முத்துராஜ் தம்பதியின் குழந்தைக்கு ஜெயகிருஷ்ணன் என பெயர் வைத்த ஓ.பி.எஸ் உரை நிகழ்த்த எழுந்த போது அந்த இடத்தில் ஜேசிடி பிரபாகர் அமர்ந்தார்.

அப்போது நான் இருக்கும் இடத்தில் உட்கார எப்போதும் போட்டி இருக்கும் போல ,  அதை இப்போது கேசிடி பிரபாகர்  பிடித்து இருக்கின்றார் என , கூறி கிண்டல் செய்தார்.

மேலும் அதிமுக இயக்கத்தை அழிக்க எதிர்கட்சிகள் சதி செய்தன,ஆனால் இந்த இயக்கத்தை வலுவானதாக ஜெயலலிதா மாற்றினார் எனவும்,மற்ற மாநிலங்கள் பார்த்து பார்த்து வியக்கும் ஆட்சியை ஜெயலலிதா கொடுத்தார் எனவும் கூறினார்.

அவரது மறைவிற்கு பின்னர், அவர் கட்டி காப்பாற்றிய சட்டவிதிகள், அதிமுக தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்ற விதிகளை தூக்கி போட்டு விட்டனர் எனவும் குற்றம்சாட்டினார்.

அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளை தொடர்ந்து, ஆட்சியை காப்பாற்ற மன்றாடி கேட்டு கொண்டதால் கழகத்தை அப்போது மீண்டும்  இணைத்ததாகவும் தெரிவித்தார். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா  என்ற உச்சபட்ச நிலையை ஏற்படுத்தியதாகவும் இங்கே நடக்கும் கூட்டத்தில்  கூட சிலர் தண்ணீர் பாட்டிலை வைத்து கொண்டு இருக்கின்றனர்.

கடந்த காலங்களில் பொதுக்குழு கூட்டங்களில் என்ற நடந்தது என அனைவருக்கும் தெரியும்.

இங்கு இருப்பவர்கள் நல்ல நோக்கத்திற்காக தண்ணீர் பாட்டில்  வைத்திருக்கின்றார்கள் என ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நினைவுபடுத்தினார். அதிமுக வரலாற்றிலேயே கழகத்தின் பொருளாளராக 12  ஆண்டுகள் இருந்தவன் நான் எனவும், ஜெ வேண்டுகோளை ஏற்று பல பணிகளை செய்த எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றி விட்டனர் எனவும் வேதனை தெரிவித்தார்.அதிமுக பொருளாளராக தான் இருந்தபோது  வழக்குகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்சி நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் தன்னிடம் கேட்டதாகவும், ஒரு வருடத்தில் அதை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் எனக் கூறியவர் ஒரே மாதத்தில் திருப்பிக் கொடுத்தார் எனவும் நினைவு கூர்ந்தார்.

மேலும்  அந்தம்மா (சசிகலா)உங்களுக்கு முதலமைச்சர் பதவியை  கொடுத்தார்கள்,  அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள் எனவும்11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும் எனவும் தெரிவித்தார்.

அப்போது  நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும்,கட்சியும் காப்பாற்ற பட்டது எனவும் தெரிவித்தார். ஆட்சியில் தவறான வழியில் சென்ற போது எச்சரித்தேன், ஆனால் அதிகார போதை, பணத்திமிரில் இருந்தார் எடப்பாடி என தெரிவித்த அவர், அதனால் ஆட்சி போனது, அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்று போனது எனவும் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு  இடைதேர்தலில் தனியாக நின்றால் ஓட்டுக்கள் பிரியும், வாபஸ் வாங்கிடுங்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார், அதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில்  வாபஸ் வாங்கியதாகவும், ஆனால் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஈரோடு கிழக்கில் தோற்று போனது எனவும், தேர்தல்களில் தோற்று போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சராக வர இருத்தை  தடுத்தவர்  என காட்டமாக கூறினார். உச்ச நீதிமனறத்தில் இன்னும் வழக்கு இருக்கின்றது. தொண்டர்களுக்காக வாதாடி கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்த அவர், இந்த பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர், அங்கு குண்டர்கள்தான் இருக்கின்றனர் எனவும், தொண்டர்களுக்கு கொடுத்துள்ள உரிமையை தந்தால்தான் தலைவர்களுக்கு நன்றி செலுத்துவது போன்றது எனவும் தெரிவித்தார்.

தனிகட்சி துவங்கும் நோக்கமில்லை என தெரிவித்த அவர், கோரப்படியில் இருந்து அதிமுகவை கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெ ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் அது நன்றியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அதிமுக துவங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவேன் எனவும், தனிக்கட்சியை எப்போதும் துவங்க மாட்டேன் என்பதுதான் நிலைப்பாடாக இருக்கின்றது என தெரிவித்த அவர், தனிக்கட்சி ஆரமித்தால் உச்ச நீதிமன்ற வழக்கில்  இடையூறு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

தற்பொழுது தேர்தலில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது எனவும், அதற்கு அமைப்பு ரீதியாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் , வட்ட கழக , பகுதி கழகங்களை மாவட்ட செயலாளர்கள் அமைக்க வேண்டும் எனவும் அப்பொழுதுதான் நம்முடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

முதல்வல் பதவி மூன்று முறை கொடுத்தார்கள். நான் திருப்பி கொடுத்து விட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது என தெரிவித்த அவர், நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகின்றேன் எனவும் தெரிவித்தார்.

ஆட்சியில் இருந்த போது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும், அதில் பல தவறுகள் இருக்கின்றது எனவும், அந்த ரகசியங்களை நான் அவுத்து விட்டால், எடப்பாடி பழனிச்சாமி  திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும் எனவும் அரசியல் ரகசியத்திற்காக அதை வெளியில் சொல்ல மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

நாம் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்,  இதை 100 சதவீதம் செய்தால்தான் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், கேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ,புகழேந்தி கலந்துகொண்டனர்.

மேலும் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டு செயல்படுவதாக சொல்பவன் முட்டாள் என ஓ பி எஸ் காட்டமாக தெரிவித்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜானகியம்மாளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக எடப்பாடி நாடகமாடுகிறார் என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் விமர்சித்துள்ளார்.