ராஜபக்சேவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை - தொல்.திருமாவளவன்

லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 19 ஆகஸ்ட் 2015 (18:13 IST)
ராஜபக்சேவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை என்று விடுதலைப் புலிகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது; ரணில் பிரதமராக உள்ளார். இத்தேர்தலில் பிரதமர் கனவோடு களத்தில் இறங்கிய இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே படுதோல்வியடைந்திருக்கிறார். அவருடைய கனவு தகர்ந்துபோனது.

இராஜபக்சே கும்பலை சிங்களவர்களே புறக்கணித்திருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதலைத் தருகிறது. தமிழீழத்திற்கு எதிராக இராஜபக்சே செயல்பட்டிருந்தாலும் சிங்களவர்கள் இராஜபக்சேவைப் புறக்கணித்திருப்பது அவர் சிங்களவர்களுக்கும் எதிரானவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இராஜபக்சேவின் குடும்பத்தின் கைகளில் இலங்கைத் தீவு சிக்கிக்கிடந்ததும் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தைக் குடும்பப் பொருளாதாரமாக மாற்றியதும் சிங்களவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான், இராஜபக்சேவுக்கு எதிராக சிங்களவர்கள் அணிதிரண்டு வீழ்த்தியுள்ளனர். அதேவேளையில், ரணில் விக்கிரசிங்கே பெற்றுள்ள வெற்றி தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பானதோ, மகிழ்ச்சிக்குரியதோ அல்ல.
ரணில் விக்கிரசிங்கே கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான சூழலை உருவாக்கியவர் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. இராஜபக்சேவுக்கும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை என்பதையும் நாம் அறிவோம்.

எனவே, இராஜபக்சே தோற்றுவிட்டார் என்றும் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றுவிட்டார் என்றும் தமிழர்கள் மகிழ்ச்சியடைய முடியாது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதேவேளையில், சிங்கள இனவெறியர்களுக்குத் துணையாக நின்ற, தமிழினத்திற்குத் துரோகம் இழைத்த கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.
ஈழத் தமிழினம் அரசியல் ரீதியாக ஒன்றுப்பட்டுள்ளனர் என்பதை இது உணர்த்துகிறது. இந்நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பல்வேறு வரலாற்றுக் கடமைகள் உள்ளன என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறது. குறிப்பாக, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கவேண்டிய பெரும்பொறுப்பு தமிழீழத் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
நடந்து முடிந்த இத்தேர்தலில் சர்வதேசக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவேண்டிய இராஜபக்சே, எப்படியும் பிரதமராகிவிடலாம், சர்வதேசப் புலனாய்வு விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கணக்குப் போட்டார். ஆனால், படுதோல்வியடைந்து இன்று மூக்கறுபட்டுக் கிடக்கிறார்.

இந்நிலையில், சர்வதேசத் தமிழ்ச் சமூகம் ஒற்றுமையாய் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அரசியல்ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வற்புறுத்தவேண்டும்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒரே மாகாணமாக அறிவிக்கவேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தைத் திரும்பப்பெறவேண்டுமென்றும், தமிழர் மண்ணில் குடியேறிய சிங்களவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்றும், தமிழர்களுக்கான மறுவாழ்வு உறுதிப்படுத்த வேண்டுமெனவும், ரணில் விக்கிரமசிங்கேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்ரீதியாக தீவிர அழுத்தம் கொடுக்கவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன், இராஜபக்சேவை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கெள்கிறோம்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :