செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2015 (13:32 IST)

தென்காசி அருகே மாயமான டீச்சர் – மாணவன்: சென்னை விரைந்த தனிப்படை போலீசார்!

தென்காசியிலிருந்து 10ஆம் வகுப்பு மாணவனும், பாடம் நடத்திய டீச்சரும் ஓடிப்போன விவகாரத்தில் நெல்லை தனிப்படை போலீசார் அவர்களைப் பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.
 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15), தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான்.
 
கடந்த 31ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற அவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் தாய் மாரியம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் சிவசுப்பிரமணியனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
 
போலீசார் விசாரணையில் சிவசுப்பிரமணியன் அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரை சங்கர சுப்பிரமணியன் தெருவைச்சேர்ந்த கேசரி மகள் கோதைலட்சுமி(23) என்பவருடன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இது குறித்து கோதைலட்சுமியின் தந்தை செங்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
 
கடந்த சில மாதங்களாக கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையறிந்த கோதைலட்சுமியின் பெற்றோர் அவரை சத்தம் போட்டுள்ளனர். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால் தங்களை பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் கடந்த 31ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
 
மாயமான 2 பேரும் எங்கு சென்றார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே சிவசுப்பிரமணியன் வீட்டை விட்டு செல்லும் போது ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து சென்றார். இதனால் போலீசார் ஏ.டி.எம். கார்டு நம்பரை வைத்து அதில் பணம் ஏதும் எடுக்கப்படுகிறதா? என்று கண்காணித்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று அந்த ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. சென்னை கும்மிடிபூண்டியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் சிவசுப்பிரமணியனும், டீச்சர் கோதைலட்சுமியும் சென்னை கும்மிடிபூண்டியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் மாணவன் மற்றும் டீச்சரைத் தேடி சென்னை விரைந்துள்ளனர்.
 
இதனிடையே மாணவன், டீச்சர் மாயமான சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள் வாட்ஸ்-அப்பில் படங்களுடன் பரவின. அந்த படங்களை பார்த்து பலர் உண்மை என நம்பினர். அதன் தொடர்ச்சியாக நேற்று மாணவனையும், டீச்சர்யும் வெட்டிக்கொலை செய்து விட்டதாக, சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த வேறொரு கொலை சம்பவம் குறித்த படங்களை ஒப்பிட்டு வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர். அதையும் பலர் நம்பி விட்டனர்.